நடுவானில் விமானத்தின் ‘எமர்ஜென்சி’ கதவை திறக்க முயன்ற பயணி... தனக்கு பேய் பிடித்துவிட்டது என்று கூறியதால் பரபரப்பு

விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, முகமது அத்னன் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்றார்.
நடுவானில் விமானத்தின் ‘எமர்ஜென்சி’ கதவை திறக்க முயன்ற பயணி... தனக்கு பேய் பிடித்துவிட்டது என்று கூறியதால் பரபரப்பு
Published on

லக்னோ,

பெங்களூருவில் இருந்து நேற்று இரவு 8.15 மணிக்கு வாரணாசி நோக்கி இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில், உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த முகமது அத்னன் என்பவர் பயணம் செய்தார். விமானம் புறப்பட்டு சுமார் 15 நிமிடங்களுக்குள், முகமது அத்னன் விமானத்தின் ‘எமர்ஜென்சி’ கதவை திறப்பதற்கு முயற்சி செய்துள்ளார்.

இதனை விமான ஊழியர்கள் பார்த்தபோது, தவறுதலாக அந்த கதவை திறக்க முயற்சி செய்துவிட்டதாக அத்னன் கூறினார். அவரை எச்சரித்த விமான ஊழியர்கள், இனி இவ்வாறு செய்யக் கூடாது என அறிவுறுத்தினர். அந்த விமானம் சுமார் 10.20 மணியளவில் வாரணாசியின் லால் பகதுர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையம் அருகே வந்தது.

விமானம் தரையிறங்குவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு, முகமது அத்னன் மீண்டும் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்றார். அவரை விமான ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். இதற்கிடையில் விமானத்தில் எச்சரிக்கை மணி ஒலித்த நிலையில், விமானி அந்த விமானத்தை தரையிறக்காமல் மீண்டும் வானில் பறக்கச் செய்தார். பின்னர் சுமார் 10.35 மணியளவில் அந்த விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.

விமானம் தரையிறங்கிய பிறகு, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் முகமது அத்னனை கைது செய்து அழைத்துச் சென்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘நான் ஏன் அவ்வாறு செய்தேன் என்று தெரியவில்லை. எனக்கு பேய் பிடித்துவிட்டது’ என்று போலீசாரிடம் முகமது அத்னன் கூறியுள்ளார். மேலும், தான் திறக்க முயன்றது விமானத்தின் எமர்ஜென்சி கதவு என்பது தனக்கு தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக முகமது அத்னன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com