அருணாசல பிரதேசத்தில் விமான விபத்து: பலியான வீரர்களில் ஒருவர் கோவையைச் சேர்ந்தவர் - உடல்களை மீட்கும் பணி தீவிரம்

அருணாசல பிரதேசத்தில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் பலியானவர்களின் உடல் களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த விபத்தில் பலியான வீரர்களில் ஒருவர் கோவையைச் சேர்ந்தவர்.
அருணாசல பிரதேசத்தில் விமான விபத்து: பலியான வீரர்களில் ஒருவர் கோவையைச் சேர்ந்தவர் - உடல்களை மீட்கும் பணி தீவிரம்
Published on

புதுடெல்லி,

விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று கடந்த 3-ந்தேதி அசாமின் ஜோர்கட் விமானப்படை தளத்தில் இருந்து அருணாசல பிரதேசத்தின் மென்சுகா பகுதிக்கு புறப்பட்டது. விமானப்படை அதிகாரிகள், ஊழியர் கள் என 13 பேருடன் சென்ற இந்த விமானம் கிளம்பிய மணி நேரத்தில் அருணாசல பிரதேசத்தில் மாயமானது.

எனவே அருணாசல பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தை மையமாக கொண்டு விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. 8 நாட்களாக நடந்த இந்த தேடலின் பலனாக கடந்த 11-ந்தேதி விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சியாங் மற்றும் ஷியோ மாவட்ட எல்லையான கட்டே பகுதியில் விமானம் நொறுங்கி கிடப்பது தெரியவந்தது.

கடல் மட்டத்தில் இருந்து 12 ஆயிரம் அடி உயரம் கொண்ட மலைப்பாங்கான அந்த பகுதியில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக 2 குழுக்களை விமானப்படை கடந்த 12-ந்தேதி அனுப்பி வைத்தது. இதில் ராணுவம் மற்றும் விமானப்படையை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் உள்பட 15 பேர் இருந்தனர்.

இந்த குழுவினர் நேற்று முன்தினம் காலையில் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு சென்று பார்த்த போது விமானத்தில் இருந்த 13 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து விமானப்படைக்கு தகவல் தெரிவித்த அவர்கள், பின்னர் உயிரிழந்த வீரர்களின் உடல்களை மீட்கும் பணிகளை தொடங்கினர். இதில் நேற்று காலை வரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே மீதமுள்ளவர்களின் உடல்களையும் மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விமானம் விபத்துக்குள்ளான இடம் கரடுமுரடான மலைப்பிராந்தியம் என்பதாலும், அங்கு விட்டுவிட்டு மழை பெய்து வருவதாலும் மீட்பு பணிகளை மேற்கொள்வது மிகுந்த சிரமமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனவே உள்ளூரை சேர்ந்த 3 மலையேற்ற வீரர்கள் நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களும் ஏற்கனவே சென்றுள்ள மீட்புக்குழுவினருடன் இணைந்து, வீரர்களின் உடல்களை மீட்கும் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு உள்ளனர். இதனால் உயிரிழந்த வீரர்களின் உடல்கள் விரைவில் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் என விமானப்படை கூறியுள்ளது.

வீரர்களின் உடல்களை மீட்கும் பணிகள் ஒருபுறம் நடக்க, விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணிகளும் மறுபுறம் நடந்தது. இதன் பயனாக கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு நேற்று மீட்கப்பட்டது. இதை ஆய்வு செய்யும் போது விபத்துக்கான காரணம் தெரியவரும் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே இந்த விபத்தில் கேரளாவை சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி திருச்சூர் மாவட்டம் பெரிங்கண்டூரை சேர்ந்த ஹரிகரன் என்பவரின் மகனான வினோத் என்பவர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். விமானப்படை அதிகாரியான இவர் தமிழகத்தின் கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

மேலும் கொல்லம் மாவட்டம் அஞ்சால் பகுதியை சேர்ந்த சசிதரன்-விமலா தம்பதியின் மகனான அனூப் குமாரும் இந்த விபத்தில் பரிதாபமாக பலியானார். தனது மனைவி விரிந்தா மற்றும் குழந்தையுடன் அசாமில் வசித்து வந்த இவர், ஜோர்கட் விமானப்படை தளத்தில் பணியில் இருந்தார்.

இதைப்போல கண்ணூர் மாவட்டத்தின் அஞ்சரகண்டியை சேர்ந்த பவித்ரன் என்பவரின் மகனான ஷரின் என்ற வீரரும் இந்த விபத்தில் உயிர்விட்டுள்ளார். ஜோர்கட் விமானப்படை தளத்தில் இருந்து அருணாசல பிரதேசத்துக்கு புறப்படுவதற்கு முன் இவர் தனது மனைவியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவலை கூறிவிட்டு சென்றுள்ளார்.

இந்த வீரர்களின் மரண செய்தியை விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. இதைக்கேட்டு அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் இந்த 3 பேரின் மரணம் கேரளா முழுவதும் பெருத்த சோகத்தை ஏற் படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com