எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவுக்குள் சென்ற போலீஸ் ஜீப்பால் பரபரப்பு

சினிமா காட்சியை மிஞ்சிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவுக்குள் சென்ற போலீஸ் ஜீப்பால் பரபரப்பு
Published on

ரிஷிகேஷ்,

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் மத்திய அரசுக்கு சொந்தமான எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இங்கு பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இதே ஆஸ்பத்திரியில் நர்சிங் அதிகாரியாக சதீஷ்குமார் என்பவர் பணியாற்றினார்.

சதீஷ்குமார், பெண் பயிற்சி டாக்டர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக அந்த பெண் டாக்டரை தவறான நோக்கத்தோடு சதீஷ்குமார் சீண்டியதாகவும், பின்னர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து 'வாட்ஸ் அப்'பில் தகவல் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பெண் பயிற்சி டாக்டர், ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு புகார் அளித்தார். அதன் பேரில் ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் மிட்டல் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் சதீஷ்குமார், பெண் பயிற்சி டாக்டரிடம் பாலியல் ரீதியில் தொல்லை தந்தது உறுதியானது.

இதையடுத்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்படுவார் என ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறியது. ஆனால் அவரை பணியில் அமர்த்திய நர்சிங் மேற்பார்வையாளர் சினோஜ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பயிற்சி டாக்டர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ரிஷிகேஷ் போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து சதீஷ் குமாரை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். அவர் அறுவை சிகிச்சை பிரிவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் பணிபுரியும் ஆஸ்பத்திரியின் 4-வது மாடியில் உள்ள வார்டுக்கு போலீசார் ஜீப்பில் நுழைந்தனர். இருபுறமும் படுக்கைகளில் நோயாளிகள் வரிசையாக படுத்து இருந்தனர்.

அவசர சிகிச்சை பிரிவில் நுழைந்த போலீஸ் ஜீப்பை கண்ட நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் என்ன நடக்கிறது என்பது புரியாமல் திகைத்தனர். இதையடுத்து போலீஸ் வாகனம் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது. 4-வது மாடிக்கு சென்ற போலீசார், சதீஷ்குமாரை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.

சினிமா காட்சியை மிஞ்சிய இது தொடர்பான 26 வினாடிகள் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com