‘போராட்டத்தின்போது ஒரு பெண்ணை அறைந்ததற்காக காவலரை களங்கப்படுத்த முடியாது’ - டெல்லி ஐகோர்ட்டு

பெண்ணை அறைந்த காவல்துறை கூடுதல் டி.சி.பி. சந்தீப் லம்பா, ஜந்தர் மந்தர் காவல் பணியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டார்.
‘போராட்டத்தின்போது ஒரு பெண்ணை அறைந்ததற்காக காவலரை களங்கப்படுத்த முடியாது’ - டெல்லி ஐகோர்ட்டு
Published on

புதுடெல்லி,

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் சுமார் ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வந்தனர். இதனை தொடர்ந்து, கடந்த 20-ந்தேதி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்றனர். இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் மாணவர்களை தடுத்து நிறுத்துவதற்காக போலீசார் கடுமையான தடியடி நடத்தினர். மாணவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதே சமயம், காவல்துறை தரப்பில் போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்து அமைதியை சீர்குலைக்க முயன்றதாகவும், அவர்கள் காவலர்கள் மீது கற்களை வீசி தாக்கியதில் ஏராளமான போலீசார் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை காவலர் ஒருவர் கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலாக பரவியது. இதையடுத்து, பெண்ணை அறைந்த காவல்துறை கூடுதல் டி.சி.பி. சந்தீப் லம்பா, ஜந்தர் மந்தர் காவல் பணியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த போராட்டத்தை தொடர்ந்து மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்தது.

இந்த நிலையில், டெல்லி ஐகோர்ட்டில் 68 வயது மூதாட்டி ஒருவர் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில், சம்பந்தப்பட்ட மூதாட்டியை காவல்துறையினர் கடந்த ஆண்டு ரமலான் பண்டிகையின்போது அவரது வீட்டில் இருந்து அழைத்து சென்று காவல்நிலையத்தில் ஒரு நாள் இரவு முழுவதும் சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்ததாகவும், இது தொடர்பாக அவர் அளித்த புகாரை விசாரிக்க சந்தீப் லம்பாவை விசாரணை அதிகாரியாக கோர்ட்டு நியமித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், சந்தீப் லம்பா தன்னிடம் வாக்குமூலம் பெறாமலேயே இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் எனவும், தற்போது அவர் போராட்டத்தின்போது ஒரு பெண்ணை அறைந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அவரது நடுநிலைத் தன்மை குறித்த கேள்விகள் எழுவதால், தனது புகார் குறித்து விசாரணை நடத்த வேறு விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும் அந்த மூதாட்டி தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி கிரீஷ் கத்பாலியா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்ட அவர், “"ஒரு பெண்ணை அறைந்ததாகக் கூறப்படும் ஒரு வீடியோவில் சிக்கியதால் மட்டுமே, அந்த காவலரை நாம் களங்கப்படுத்த முடியாது. கள யதார்த்தங்கள் நமக்குத் தெரியுமா? போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்திருந்தால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கும். அதில் பலர் உயிரிழந்திருப்பார்கள்.

போராட்டம் செய்வதற்கான அடிப்படை உரிமை உள்ளது, ஆனால் அது இறையாண்மையை சேதப்படுத்தும் அளவிற்கு போகக் கூடாது. டி.சி.பி. சந்தீப் லம்பா கூட்டத்தைக் கையாண்ட விதம், அது அதிகார துஷ்பிரயோகமாக இருந்தாலும் கூட, அவரை இப்படிக் களங்கப்படுத்த முடியாது. நியாயமான விசாரணைக்கான உரிமையும் அவருக்கு உண்டு. ஒவ்வொரு வழக்கிலும் அவர் ஒருதலைப்பட்சமாக இருப்பார் என்று கூற முடியுமா? அரசு அமைப்பின் நற்பெயரைக் கெடுப்பதை நிறுத்துங்கள்” என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com