48 மணிநேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; அமலாக்க துறைக்கு ஆம் ஆத்மி எம்.பி. நோட்டீஸ்

அமலாக்க துறை 48 மணிநேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
48 மணிநேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; அமலாக்க துறைக்கு ஆம் ஆத்மி எம்.பி. நோட்டீஸ்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் புதிய மதுபான கொள்கை தொடர்புடைய ஊழல் வழக்கில் விசாரணை அமைப்புகளில் ஒன்றான அமலாக்க துறை சார்பிலான அறிக்கை ஒன்றில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கின் பெயரும் இடம் பெற்று உள்ளது என கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து ஆம் ஆத்மி எம்.பி.யான சஞ்சய் சிங், அமலாக்க துறைக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளார். அவர், தனது வழக்கறிஞர் மணீந்தர் சிங் பேடி வழியே அமலாக்க துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஷ்ரா மற்றும் கூடுதல் இயக்குநர் ஜோகிந்தர் ஆகியோருக்கு அந்த நோட்டீசை அனுப்பி உள்ளார்.

அதில், டெல்லி மதுபான கொள்கையில் தொடர்பு உள்ளது என பொய்யான, வக்கிரத்துடனான, கீழ்த்தர மற்றும் அடிப்படையற்ற பிரசாரம் செய்து பொதுவெளியில் தனக்கு கெட்ட பெயர் ஏற்படும் வகையிலான முயற்சிகளில் உங்களது துறையை சேர்ந்த நபர்கள், ஊழியர்கள் முயற்சித்து உள்ளனர்.

அதிகாரிகள் தெரிந்தே, உள்நோக்கத்துடன் உண்மையற்ற, அவதூறு ஏற்படுத்த கூடிய மற்றும் குற்றச்சாட்டில் சிக்க வைக்க கூடிய அறிக்கைகளை எம்.பி.க்கு எதிராக வெளியிட்டு உள்ளனர். இதனால், அவர் மனஉளைச்சல் மற்றும் துன்புறுத்தலை சந்தித்து உள்ளார்.

கீழ்த்தர நோக்கத்துடன் செய்யப்பட்ட தவறான இந்த செயலுக்கு அமலாக்க துறையே கடுமையான முறையில் பொறுப்பேற்க வேண்டும். அதனால், இந்த நோட்டீசை பெற்ற 48 மணிநேரத்தில் பதிலளிக்க வேண்டும்.

அப்படி செய்ய தவறினால், உங்களுக்கு எதிராக தொடர்புடைய கோர்ட்டில் முறைப்படி சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை தொடங்கும்படி எனது வழக்கறிஞருக்கு அறிவுறுத்தி உள்ளேன். இதனால் ஏற்படும் செலவுகளுக்கும் மற்றும் அதன் விளைவுகளுக்கும் நீங்களே முழுமையாக பொறுப்பேற்க வேண்டி இருக்கும் என அந்த நோட்டீஸ் தெரிவிக்கின்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com