அதிக வட்டி தருவதாக கூறி மோசடி செய்வதை தடுக்க தனியார் முதலீட்டு நிறுவனங்களை கண்காணிக்க தனி அமைப்பு; மந்திரி ஆர்.அசோக் பேட்டி

அதிக வட்டி தருவதாக கூறி மோசடி செய்வதை தடுக்க தனியார் முதலீட்டு நிறுவனங்களை கண்காணிக்க தனி அமைப்பு தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
அதிக வட்டி தருவதாக கூறி மோசடி செய்வதை தடுக்க தனியார் முதலீட்டு நிறுவனங்களை கண்காணிக்க தனி அமைப்பு; மந்திரி ஆர்.அசோக் பேட்டி
Published on

பெங்களூரு:

கர்நாடக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முதலீட்டு நிறுவனங்கள்

கர்நாடகத்தில் அதிக வட்டி வழங்குதாக சில தனியார் முதலீட்டு நிறுவனங்கள் ஆசைகளை தூண்டிவிடுகின்றன. அதில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை முதலீடு செய்கிறார்கள். அந்த முதலீட்டு பணத்தை சில முதலீட்டு நிறுவனங்கள் ஏமாற்றி விடுகின்றன. இதனால் அந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இவற்றை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனியாக ஒரு கண்காணிப்பு அமைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளோம்.

இத்தகைய பெரும்பாலான முதலீட்டு நிறுவனங்கள் மக்களின் முதலீட்டு பணத்தை திரும்ப வழங்குவது இல்லை. மழையால் சேதம் அடையும் வீடுகளுக்கு நிவாரணம் வழங்க வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளில் திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். வீடுகள் இடிந்து விழுந்த உடனேயே அதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் வீடுகளை இழந்த பலர் தாமதமாக அரசுக்கு தகவல் தெரிவிக்கிறார்கள். அத்தகையவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியாத நிலை உள்ளது.

மக்களுக்கு நிலம்

அதனால் மழையால் சேதம் அடையும் வீடுகள் குறித்து அரசுக்கு ஒரு மாதத்திற்குள் தகவல் தெரிவிக்க வழிவகை செய்யப்படுகிறது. கபினி அணை கட்டப்பட்டதால் அங்கு இருந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். அந்த மக்களுக்கு 1,070 ஏக்கர் நிலம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதில் இதுவரை 700 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர்களுக்கு இதுவரை நில உரிமை வழங்கப்படவில்லை. வனத்துறை நில உரிமையை வழங்க மறுக்கிறது. இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் நான் ஆலோசனை நடத்தியுள்ளேன். அந்த மக்களுக்கு நிலம் வழங்கி அதன் நில உரிமை ஆவணங்களையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். நில பதிவு பணிகளை ஒரு வாரத்தில் முடிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. வருகிற சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் அந்த மசோதா தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com