ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் செலவுகள் குறையும் மத்திய மந்திரி ஷோபா பேட்டி

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் செலவுகள் குறையும் என்றும் எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தை எதிர்ப்பது ஏற்புடையது அல்ல என்றும் மத்திய மந்திரி ஷோபா கூறியுள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் செலவுகள் குறையும் மத்திய மந்திரி ஷோபா பேட்டி
Published on

மங்களூரு:-

ஒரே நாடு ஒரே தேர்தல்

உடுப்பி மாவட்டம் மணிப்பாலில் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்த மத்திய மந்திரி ஷோபா கூறியதாவது:-

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக தேர்தல் நடக்கிறது. இதனால் தேர்தல் செலவு அதிகமாகிறது. மேலும் அதிக கால நேரம் ஏற்படுகிறது. அதிகாரிகளும் இந்த தேர்தல் நேரங்களில் கூடுதல் பணியாற்றவேண்டியுள்ளது. எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்த மத்திய அரசு முன் வந்துள்ளது.

இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் தேர்தலுக்கான செலவுகள் குறைந்துவிடும். இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் எதிர்க்கட்சிகள் அச்சப்பட தேவையில்லை. மத்திய அரசின் இந்த திட்டத்தை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏற்புடையது அல்ல. 

வழக்கம்போல அனைத்து கட்சிகளும் பிரசாரம் செய்யவேண்டும். யாரை மக்களுக்கு பிடிக்கிறதோ, அந்த கட்சிகளுக்கு வாக்களிப்பார்கள். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படுவது இல்லை.

உத்தரவாத திட்டங்கள்

கர்நாடகத்தில் அரசின் உத்தரவாத திட்டங்களால் பலர் அதிருப்தியில் உள்ளனர். அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணத்தால் தனியார் பஸ் உரிமையாளர்கள் நஷ்டம் அடைந்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும். 

உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவதில் குறியாக இருக்கும் மாநில அரசு அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் கவனிக்கவேண்டும். குறிப்பாக ஆசிரியர்கள், நீதிபதிகளுக்கு சரியாக சம்பளம் வழங்கப்படவில்லை.

ஒருவரிடம் இருக்கும் பணத்தை பறித்து மற்றவர்களுக்கு கொடுப்பார்கள் என்பதுபோன்று, வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு ஒதுக்கும் பணத்தை , உத்தரவாத திட்டத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அரசுக்குதான் நஷ்டம் ஏற்படும். மாநில அரசு தனது திட்டங்களை மட்டுமே மையப்படுத்தி, மத்திய அரசின் திட்டங்களை மறைக்க நினைக்கின்றனர்.

டிஜிட்டல் இந்தியா திட்டம்

மத்திய அரசின் கிசான் சம்மான் திட்டத்திற்கு மாநில அரசின் பங்களிப்பு இல்லை. மத்திய அரசு கொண்டு வந்த டிஜிட்டல் இந்தியா மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த திட்டத்தை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கேலி செய்தார். ஆனால் அந்த திட்டம் இப்போது மக்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சியால் இதற்கு கருத்து கூற முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com