7 சிங்கங்களை அடுத்தடுத்து வேட்டையாடி, சாய்த்த சிறிய உயிரினம்: கிர் காடுகளில் பரபரப்பு

ஆபத்துக்குரிய சூழலில் உள்ள சிங்கங்களை மீட்டு, வேறிடத்திற்கு கொண்டு செல்கிறோம் என்று அதிகாரி கூறினார்.
7 சிங்கங்களை அடுத்தடுத்து வேட்டையாடி, சாய்த்த சிறிய உயிரினம்:  கிர் காடுகளில் பரபரப்பு
Published on

வதோதரா

குஜராத்தின் கிர் காடுகள், நாட்டில் சிங்கங்களின் வாழ்விடம் என்ற பெருமையை பெற்ற பகுதியாகும். அதிக வனப்பரப்பை கொண்ட இந்த காடுகளில் சுற்றி திரிந்து வரும் சிங்கங்களை பொதுமக்கள் வாகனங்களில் சென்று பார்வையிடுவதும் வழக்கம்.

இந்த நிலையில், சமீப நாட்களாக 7 சிங்கங்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளன. இது வனத்துறை அதிகாரிகள் மற்றும் சுற்றுலாவாசிகளிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. குஜராத் வன மந்திரி அர்ஜுன் மொத்வாடியா இதுபற்றி கூறும்போது, கிர் கிழக்கு மற்றும் கிர் மேற்கு மண்டலங்களில் கடந்த வாரத்தில் 5 சிங்கங்கள் உயிரிழந்து விட்டன என்றார்.

எனினும், வன அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த 10 நாட்களில் 4 குட்டிகள் மற்றும் 3 பெரிய சிங்கங்கள் என மொத்தம் 7 சிங்கங்கள் உயிரிழந்து உள்ளன. 4 சிங்க குட்டிகளுக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. அது பேபீசியாவாக இருக்க கூடும். பெரிய சிங்கங்கள் இயற்கை காரணங்களால் உயிரிழந்திருக்க கூடும் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து 17 சிங்கங்கள் மீட்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றிற்கு தொடக்க கால தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டன. எனினும், தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதுகாப்பு மற்றும் கால்நடை பரிசோதனைகளையும் தீவிரப்படுத்தி உள்ளோம். தடுப்பு நடவடிக்கையாக, புழு நீக்கம் மற்றும் ஒட்டுண்ணிகளை கட்டுப்படுத்தும் சிகிச்சைகள் நடந்து வருகின்றன என்றார்.

இதனையடுத்து, உயிரிழந்த சிங்கங்களின் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். பாதிப்பு ஏற்பட கூடும் என்ற ஆபத்துக்குரிய சூழலில் உள்ள சிங்கங்களை மீட்டு, வேறிடத்திற்கு கொண்டு செல்கிறோம் என்றும் துறை ரீதியாக எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி அதிகாரி கூறினார்.

இந்த பேபீசியா என்ற ஒட்டுண்ணி தொற்றானது, ஒரு விலங்கின் சிவப்பு ரத்த அணுக்களை கடுமையாக பாதிக்கும். இதனால், சிங்கங்களுக்கு பலத்த பாதிப்பு ஏற்பட்டு மரணத்திற்கு வழிவகுக்கும். கடந்த 2018-ம் ஆண்டு இதுபோன்று ஏற்பட்ட பாதிப்பில் 11 சிங்கங்கள் உயிரிழந்தன. எனினும், தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று அந்த வன அதிகாரி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com