ஒரு சிறிய விசயம்... இளைஞர்களுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வழங்கிய அறிவுரை

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நிலைக்கு இந்தியா உருமாறும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பேசியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் வளர்ச்சிக்கான பாரதத்தின் இளம் தலைவர்களுக்கான பேச்சுவார்த்தை நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டார். அவர் கூட்டத்தினரிடையே பேசும்போது, என்னுடைய வேலைக்கான களம், என்னுடைய அனுபவம் வேறுபட்டது.
எனக்கும் இளைஞர்களுக்கும் இடையே பெரிய வயது வித்தியாசம் உள்ளது. நீங்கள் என்னை விட 60 வயது இளமையானவர்கள். அதனால், நான் இதில் பங்கேற்க வரவா? வேண்டாமா? என சிறிது குழப்பம் ஏற்பட்டது. நான் சுதந்திர இந்தியாவில் பிறந்தவன் அல்ல. சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்த இந்தியாவில் பிறந்தவன்.
என்னுடைய இளமை காலங்கள் ஓடி விட்டன. இன்று எவ்வளவோ மாறி விட்டன என்றார். தொடர்ந்து அவர், ஆனால் ஒரு விசயம் பொதுவாக தொடர்ந்து உள்ளது. ஒரு சிறிய விசயம்... வாழ்க்கையில் உங்களுடைய இடம் என்ன என்று அது தீர்மானிக்கிறது.
அதுதான், முடிவு எடுக்கும் திறன். ஒவ்வொரு நாளும் நீங்கள் அனைவரும் முடிவு எடுக்கிறீர்கள். சிறிதோ, பெரிதோ, வளர வளர நீங்கள் ஒவ்வொரு விசயத்திலும் முடிவு எடுத்தே ஆக வேண்டும்.
இந்தியா வளர்ச்சி அடையும். அது நிச்சயம். யாரும் இயக்காமல், தானாகவே வளர்ச்சி அடையும் வகையில் இந்த நாட்டை ஓரிடத்திற்கு பிரதமர் மோடி கொண்டு சென்றிருக்கிறார். வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நிலைக்கு இந்தியா உருமாறும் என பேசியுள்ளார்.






