மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய வழக்கில் திடீர் திருப்பம்வாலிபரை காரை ஏற்றி கொல்ல முயன்றது அம்பலம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய வழக்கில் திடீர் திருப்பமாக வாலிபரை காரை ஏற்றி கொலை செய்ய முயன்றது அம்பலமாகி உள்ளது. பெண் விவகாரத்தில் வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய வழக்கில் திடீர் திருப்பம்வாலிபரை காரை ஏற்றி கொல்ல முயன்றது அம்பலம்
Published on

சிக்கமகளூரு :-

வாலிபர் படுகாயம்

சிக்கமகளூரு (மாவட்டம்) டவுன் பகுதியை சேர்ந்தவர் நகுல் (வயது23). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்யாண் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து நகுல் படுகாயம் அடைந்தார்.

அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சிக்கமகளூரு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக நகுல் காரை ஏற்றி கொலை செய்ய முயன்றது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக போலீசார் நகுலின் நண்பரான கல்யாண் நகரை சேர்ந்த அங்கித்தை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரும் ஒப்பு கொண்டார்.

காரை ஏற்றி...

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

நகுலும், அங்கித்தும் நண்பர்கள் ஆவர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளனர். இதனால் அவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், தனது காதலுக்கு நகுல் இடையூறாக இருப்பதாக கருதிய அங்கித், அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்யாண் நகரில் மோட்டார் சைக்கிளில் வந்த நகுல் மீது அங்கித் காரை ஏற்றி உள்ளார். இதில் நகுல் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

மோட்டார் சைக்கிள் காரில் சிக்கி சிறிது தூரம் சென்றது. பின்னர் மாட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அங்கித் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். நகுல் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

அந்த விபத்து நடந்ததும் அங்கித்தின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு போலீசார் விசாரித்தபோது, அவர் சிக்கி கொண்டது தெரியவந்தது.

கைது

இதையடுத்து சிக்கமகளூரு டவுன் போலீசார் இதனை கொலை முயற்சி வழக்காக மாற்றி அங்கித்தை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பெண் விவகாரத்தில் நண்பரை காரை ஏற்றி வாலிபர் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com