

பெலகாவி,
பெலகாவியில், நள்ளிரவில் 24 ஆயிரம் லிட்டர் மதுபானம் கடத்திய டேங்கர் லாரியை, கலால் துறையினர் வாகன சோதனை நடத்தி பிடித்தனர். மேலும் டிரைவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
பெலகாவியில் இருந்து மராட்டியத்துக்கு டேங்கர் லாரியில் மதுபானம் கடத்திச் செல்லப்படுவதாக கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து கலால் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பெலகாவி மாவட்டம் எம்.கே.ஹுப்பள்ளி டவுன் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஹோலிஹொசூரு கிராமத்தில் இருந்து எம்.கே.ஹுப்பள்ளி டவுன் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு டேங்கர் லாரி நள்ளிரவு 12.25 மணியளவில் வந்து கொண்டிருந்தது. அந்த லாரி அதிவேகமாக வந்து கொண்டிருந்தது.
அதைப்பார்த்த போலீசார் லாரியை நிறுத்தச் சொல்லி கையசைத்தனர். மேலும் சிவப்பு விளக்கையும் காண்பித்தனர். ஆனால் லாரியை நிறுத்தாமல் டிரைவர் வேகமாக ஓட்டிச்சென்றார். அதையடுத்து போலீசார் தங்களது வாகனங்களில் அந்த லாரியை விரட்டிச்சென்று மடக்கினர். பின்னர் லாரியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த டேங்கர் லாரியில் 24 ஆயிரம் லிட்டர் மதுபானம் கடத்திச் செல்வது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.32 லட்சத்து 40 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து லாரி டிரைவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் விஜயாப்புரா மாவட்டம் போலசிக்கலக்கி கிராமத்தைச் சேர்ந்த பண்டேநவாஸ் நபி சாப் என்பதும், சட்டவி ரோதமாக லாரியில் மதுபானம் கடத்திச் செல்வதும் தெரியவந்தது. அதையடுத்து அவர் மீது வழக்குப்பதிந்த கலால் துறை போலீசார், லாரியையும், அதில் இருந்த 24 ஆயிரம் லிட்டர் மதுபானத்தையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து நபி சாப்பை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். லாரியின் உரிமையாளரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு கலால் துறை போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இந்த சம்பவம் பெலகாவியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.