ஜீவனாம்சம் கேட்ட மனைவியை கொன்ற வாலிபர்

ஜீவனாம்சம் கேட்ட மனைவியை கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஜீவனாம்சம் கேட்ட மனைவியை கொன்ற வாலிபர்
Published on

ஹாசன்: கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேளூர் நகர் பம்ப்ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 37). இவரது மனைவி அஸ்வினி (36). இவர்கள் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் மருந்து கடை நடத்தி வந்த ஜெகதீசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் பணப்பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் அஸ்வினி கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியே வசித்து வந்தார்.

மேலும், தங்களுக்கு ஜீவனாம்சம் தர ஜெகதீசுக்கு உத்தரவிடும்படி கோர்ட்டில் அஸ்வினி வழக்கு தொடர்ந்தார். அப்போது அஸ்வினிக்கு மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீஷ், அஸ்வினியை சமாதானம் பேசுவது போல் வீட்டுக்கு அழைத்து வந்து கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அஸ்வினி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ஜெகதீசை பேளூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com