பள்ளிக்கூட பையில் பதுங்கி இருந்த விஷ பாம்பு.!

பள்ளிக்கூட பையில் பதுங்கி இருந்த நாகப்பாம்பை லாவகமாக பிடித்தார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அத்தாணி அருகே எலவக்காட்டு வீட்டை சேர்ந்தவர் அப்துல் அஸீஸ். இவரது மகன் சிராஜ், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 1-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் பள்ளிக்கூடம் சென்ற சிராஜ் மாலையில் டியூசனுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினான். அப்போது அவர் பள்ளிக்கூட பையை வீட்டில் இருந்த மேஜையில் வைத்தான்.
நேற்று காலை வீட்டை சுத்தம் செய்தபோது சிராஜின் பள்ளிக்கூட பையை எடுத்து ஓரமாக வைக்கப்பட்டது. அப்போது அந்த பையில் நாகப்பாம்பு புகுந்து பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் அலறியடித்து பையை வீட்டின் வெளியே வீசினர். தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்படி வனத்துறையினர் பாம்புபிடி வீரரான எளமக்கரா பகுதியை சேர்ந்த ரின்சாத் என்பவரை வரவழைத்தனர். அவர் பள்ளிக்கூட பையில் பதுங்கி இருந்த நாகப்பாம்பை லாவகமாக பிடித்தார். இதையடுத்து பிடிபட்ட பாம்பு, வனத்துறையினர் முன்னிலையில் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.






