மிரள வைத்த திருமண பரிசு; 2 மணமகன்களுக்கு தலா ரூ.1 கோடி பணமாலை

ரூ.2 கோடி மதிப்பிலான இந்த மாலைகள், சுமார் 100 அடி நீளம் கொண்டவையாக இருந்தன.
மிரள வைத்த திருமண பரிசு; 2 மணமகன்களுக்கு தலா ரூ.1 கோடி பணமாலை
பணமாலை
Published on: 

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் நடைபெற்ற திருமண விழாவில், இரு மணமகன்களுக்கு தலா ரூ.1 கோடி மதிப்பிலான பணமாலைகள் அணிவிக்கப்பட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமண ஊர்வலம்

மதுரா மாவட்டம் நாக்லா போண்டா கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் மற்றும் கன்ஹா ராகவ் ஆகிய இரு சகோதரர்களுக்கும் ஒரே நாளில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. கடந்த 21-ம் தேதி திருமண ஊர்வலத்தில் மணமகன்கள் பிரசாந்த், கன்ஹா ராகவ் ஆகியோர் குதிரைகளில் மணமகள்களின் கிராமத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.

திருமண சடங்குகள்

நெருங்கிய உறவினர்கள் பரிசுகளை வழங்கினர். இவர்களின் திருமண சடங்குகளின்போது, ராஜஸ்தான் மாநிலம் நந்தோலா கிராம தலைவரான இவர்களின் அக்கா கணவர் யோகேஷ் குமார், மைத்துனர்களுக்கு மறக்க முடியாத பரிசை வழங்க முடிவு செய்தார்.

ரூ.2 கோடி பணமாலைகள்

இதற்காக ரூ.500 நோட்டு கட்டுகளை கொண்டு பிரம்மாண்டமான இரண்டு பணமாலைகள் தயாரிக்கப்பட்டன. தலா ரூ.1 கோடி வீதம் மொத்தம் ரூ.2 கோடி மதிப்பிலான இந்த மாலைகள், சுமார் 100 அடி நீளம் கொண்டவையாக இருந்தன.

தெரு வரை நீண்ட பணமாலை

மாலைகள் மிக அதிக எடையுடன் இருந்ததால், மணமகன்கள் இருவரும் வீட்டின் மாடியில் நின்றிருக்க, அவர்களுக்கு இந்த பணமாலைகள் அணிவிக்கப்பட்டன. வீட்டு மாடியில் இருந்து தெரு வரை நீண்டிருந்த இந்த பணமாலைகளை உறவினர்கள் பலர் சேர்ந்து பிடித்திருந்தனர்.

வியப்பில் ஆழ்ந்த கிராம மக்கள்

திருமண விழாவில் அக்கா கணவர் பொழிந்த இந்த பரிசு மழையையும், தெரு வரை நீண்ட பணமாலைகளையும் கண்ட கிராம மக்களும், உறவினர்களும் வியப்பில் ஆழ்ந்தனர்.

X