மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி 2 பவுன் செயின் பறிப்பு

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐதராபாத்,
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் பொட்டிகுண்ட்லா கிராமத்தைச் சேர்ந்தவர் சி.வெங்கடரத்னம்மா (வயது 56). இவர், கிராமத்துக்கு அருகிலுள்ள ஒரு மாந்தோப்பில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் வெங்கடரத்னம்மாவிடம் வந்தார். அவர், தனது பணப்பை இங்கே தவறி விழுந்து விட்டது, அதை தேடி எடுப்பதற்காக வந்தேன், எனக் கூறி பணப்பையை தேடுவதுபோல் நடித்து வெங்கடரத்னம்மாவை திடீரெனத் தாக்கி கீழே தள்ளிவிட்டு கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றார்.
அப்போது அவர் கூச்சலிட்டு அலறினார். தங்கச் சங்கிலியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு போராடியதில் சங்கிலியின் ஒரு பகுதி வெங்கடரத்னம்மாவின் கையில் சிக்கியது. மீதியை மர்மநபர் பறித்துச் சென்று விட்டார். 2 பவுன் சங்கிலியை மர்மநபர் பறித்துச் சென்று விட்டதாக வெங்கடரத்னம்மா கொடுத்த புகாரின் பேரில் புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






