வீட்டிலிருந்து ரூ.50 லட்சம் பணம், நகை திருடி காதலிக்கு ஆடம்பர பரிசுகளை வழங்கிய வாலிபர் !

வீட்டிலிருந்து ரூ.50 லட்சம் பணம், நகை திருடி காதலிக்கு ஆடம்பர பரிசுகளை வழங்கிய வாலிபர் !
சொந்த வீட்டில் திருடிய நபர்
திருடிய நபர் மற்றும் அவரது காதலி
Published on

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், காதலியுடன் உல்லாசமாக செலவு செய்வதற்காக தனது வீட்டில் இருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் தங்க நகைகளை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மகன் மீது புகார்

அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டை சேர்ந்தவர் யாஷ் தனுகா . இவரது பெற்றோர் சில நாட்களுக்கு வெளியூர் சென்றிருந்தனர். இதை பயன்படுத்திக்கொண்ட யாஷ் தனுகா, பெற்றோரின் அறையில் இருந்த லாக்கரை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் தங்க நகைகளை திருடியதாக கூறப்படுகிறது.

வெளியூர் சென்றிருந்த பெற்றோர் வீடு திரும்பியபோது வீட்டில் இருந்த நகை, பணம் திருடப்பட்டிருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தனது மகன் மீது போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து யாஷ் தனுகாவை கைது செய்தனர். விசாரணையில், பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் பணம், நகையை திருடியதாக கூறியுள்ளார்.

ஐ போன் பரிசு

திருடப்பட்ட நகைகளில் சிலவற்றை விற்று பணமாக்கியுள்ளார். அந்த பணத்தில் தனது காதலி புபாலி தத்தாவுக்கு சுமார் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான ஐபோன் உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுகளை வாங்கி கொடுத்துள்ளார். மேலும், காதலியுடன் வெளியே செல்வது, பார்ட்டி உள்ளிட்டவற்றுக்கும் திருடிய பணத்தை செலவு செய்துள்ளார்.

வீட்டில் நகை, பணத்தை திருடியபோது அவரது காதலி புபாலி தத்தா அங்கு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் திருட்டில் அவருக்கு ஏதேனும் தொடர்பு இருந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவருக்கும் இடையே பரிமாறப்பட்ட குறுஞ்செய்திகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

தீவிர விசாரணை

மேலும், திருடப்பட்ட சில தங்க நகைகளை விற்பனை செய்ய ஜிதேந்திர சோமானி, ரோகித் பிரசாத் ஆகிய 2 நபர்கள் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோலாகாட் பகுதியில் உள்ள ஒரு கடையில் சில நகைகள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், அந்த நகைகளை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். திருடப்பட்ட பணம் எவ்வாறு செலவு செய்யப்பட்டது, இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com