கணவர் மீது 'பலாத்கார புகார்' அளித்த இளம்பெண் - வெளியான பரபரப்பு தகவல்

இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் காதலுக்கு பெற்றோர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கதக்,
கர்நாடக மாநிலம் கதக் டவுன் பெடகேரி பகுதியை சேர்ந்தவர் விஷால் குமார் (வயது 26). இவரும் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். 2 பேரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு இளம்பெண்ணின் பெற்றோர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும் கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி 2 பேரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இது இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. காதல் ஜோடிகளை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அதே நேரம் விஷால் குமாரை, முஸ்லிம் சமுதாய முறைப்படி திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர். இதை ஏற்ற விஷால் குமார் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி முஸ்லிம் முறைப்படி இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் விஷால் குமார் மதம் மாறாமல் இருந்துள்ளார். இதனால் அவரை மதம் மாறும்படி அவரை கட்டாயப்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் பதிவு திருமணம் செய்திருந்த ஆவணத்தில் விஷால் குமாரின் பெயர், விராஜ் சாப் என்று மாற்றம் செய்யப்பட்டது. இதை அறிந்த விஷால் குமார், தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது சிறுமியின் குடும்பத்தினர் விஷால் குமாரை, இந்து மதத்திற்கு செல்லக்கூடாது என்று கூறினர்.
இதில் கோபம் அடைந்த விஷால்குமார், கதக் டவுன் போலீசில் மனைவியின் குடும்பத்தினர் தன்னை, மதம் மாற்றம் செய்ய கட்டாயப்படுத்துவதாக புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் நேற்று இளம்பெண், விஷால் குமார் மீது பலாத்கார புகார் அளித்துள்ளார். அதாவது காதலிக்கும்போது தனக்கு 17 வயதுதான். இதை அறிந்து விஷால் குமார் என்னிடம் திருமண ஆசைக்காட்டி வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். எனவே அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து விசாரித்த போலீசார், இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் கணவர் விஷால் குமார் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக 2 பேருக்கும் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மதம் மாற்றம் செய்ய முயன்றதாக மனைவி மீது புகார் அளித்த விஷால் குமாருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.






