ஆதார் சட்ட விதிகளை மீறினால் ரூ.1 கோடி அபராதம் - புதிய திருத்த மசோதா இன்று தாக்கல்

ஆதார் சட்ட விதிகளை மீறினால் ரூ.1 கோடிவரை அபராதம் விதிப்பதற்கான புதிய திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
ஆதார் சட்ட விதிகளை மீறினால் ரூ.1 கோடி அபராதம் - புதிய திருத்த மசோதா இன்று தாக்கல்
Published on

புதுடெல்லி,

ஆதார் திட்டம், அரசியல் சட்டப்படி செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு அளித்தது. அதே சமயத்தில், எந்தெந்த விஷயங்களுக்கு ஆதார் கட்டாயம் என்றும், எந்தெந்த விஷயங்களுக்கு கட்டாயம் அல்ல என்றும் உத்தரவிட்டது.

இதற்கிடையே, ஆதார் சட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், அச்சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தவறு செய்யும் அமைப்புகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆதார் ஆணையத்துக்கு அதிகாரம் அளிக்கப்படாமல் இருந்தது. ஆனால், மற்ற ஒழுங்குமுறை அமைப்புகளைப் போல், ஆதார் ஆணையத்துக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில், புதிய திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது.

அதன்படி, ஆதார் சட்ட விதிகள், ஒழுங்குமுறைகள், உத்தரவுகள் ஆகியவற்றை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.1 கோடிவரை அபராதம் விதிக்கப்படும். முதல் தடவை அபராதம் விதித்த பிறகும், தொடர்ந்து விதிகளை மீறி வந்தால், ஒவ்வொரு விதிமீறலுக்கும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

அனுமதியின்றி, மத்திய அடையாள தகவல் தொகுப்பகத்தை பயன்படுத்துதல், தகவல்களை அழித்தல் போன்றவற்றுக்கான சிறைத்தண்டனை 3 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.

குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்ய பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதல் அவசியம். ஆதார் இல்லாததற்காக, எந்த குழந்தைக்கும் சலுகைகள் மறுக்கப்படாது. குழந்தையாக இருந்தபோது அளித்த பயோமெட்ரிக் பதிவுகளை, 18 வயது பூர்த்தியான 6 மாதங்களுக்குள் ரத்து செய்ய வாய்ப்பு அளிக்கப்படும். புதிய செல்போன் சிம்கார்டு பெறவும், வங்கி கணக்கு தொடங்கவும் விருப்பத்தின்பேரில் ஆதார் எண் அளிக்கலாம்.

இந்த திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com