

புதுடெல்லி,
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அவர்களது சொந்த அடையாளங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சார்பில் வழங்கப்படும் இந்த அட்டையை பல்வேறு மானிய திட்டங்களுக்கு மத்திய அரசு கட்டாயமாக்கி வருகிறது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டு உள்ளன. இந்த வழக்கு விசாரணையின், போது இந்த வழக்கின் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, சிம்கார்டுகள் வழங்க ஆதார் எண்ணை கட்டாயமாக கேட்க கூடாது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில், ஆதார் கார்டு நகல் அளிக்காதவர்களுக்கு சிம் கார்டுகள் மறுக்கப்பட்டதாக ஏப்ரல் 27 ம் தேதி புகார் எழுந்தது. இதனையடுத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு சில வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது. இதன்படி, மொபைல் போன் சிம் கார்டு வாங்க ஆதார் எண்ணை அளிக்குமாறு வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தக் கூடாது.
ஆதார் எண் அளிக்காவிட்டாலும் சிம் கார்டு வழங்கலாம். அதற்கு பதிலாக அடையாள சான்றாக ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற பிறகு சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த வழிகாட்டுதல்களை உடனடியாக நடைமுறைப்படுத்தி பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.