

குருகிராம்
ஆதார் அட்டை
பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு ஆதார் அட்டைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது.
அந்த வகையில் அரசு நலத்திட்டங்கள் மற்றும் மானியங்களை பெற ஆதார் அட்டை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
குறிப்பாக கியாஸ் சிலிண்டர் இணைப்பு பெற, புதிய வங்கி கணக்கு தொடங்க உள்ளிட்ட சேவைகளுக்கு ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
பான் கார்டுடன் இணைப்பு
மேலும் குடும்ப அட்டை மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டது.
அதன் தொடர்ச்சியாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அதே போல் சிம் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
அடுத்த கட்டமாக ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்து உள்ளார்.
விரைவில் அமலுக்கு வரும்
அரியானாவில் நடைபெற்ற டிஜிட்டல் மாநாடு 2017-ல் கலந்து கொண்டு பேசியபோது ரவிசங்கர் பிரசாத் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஓட்டுனர் உரிமங்கள் வைத்திருப்பதை கண்டறிய ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரியுடன் பேசி உள்ளேன். இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என கூறினார்.
ஆதார் அட்டை என்பது சிறந்த நிர்வாகம் மற்றும் அதிகாரத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் கருவி என கூறிய ரவிசங்கர் பிரசாத், பணம் கையாடலை தவிர்க்க பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்தார்.