

மும்பை,
மராட்டிய மாநிலத்தில் ஆளும் சிவசேனா அமைச்சரவையில், அம்மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் மகனான ஆதித்யா தாக்கரே சுற்றுச்சூழல் துறை மந்திரியாக பதவி வகிக்கிறார்.
இந்த நிலையில், உத்தவ் தாக்கரேவின் காரில் இருந்து ஆதித்யா தாக்கரேவை கீழே இறங்குமாறு பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமா மோடி இன்று புனேவின் டெஹுவில் உள்ள ஜகத்குரு ஸ்ரீசாந்த் துக்காராம் மகாராஜா ஆலயத்தை திறந்து வைக்கிறார். மராட்டிய மாநிலத்துக்கு பிரதமரின் வருகை தருவதையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் விமானம் மூலம் வந்திறங்கும் பிரதமர் மோடியை வரவேற்கும் நபர்களின் பட்டியலில், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் பெயர் உள்ள நிலையில் ஆதித்யா தாக்கரேவின் பெயர் இல்லை.
பிரதமர் மோடியை வரவேற்கும் வி.ஐ.பி.க்கள் பட்டியலில் ஆதித்யாவின் பெயர் இல்லை என்று சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ் பி ஜி) கூறியது. உடனே உத்தவ் தாக்கரேவின் காரில் இருந்து ஆதித்யா தாக்கரேவை கீழே இறங்குமாறு பாதுகாப்பு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இதனை அறிந்த உத்தவ் தாக்கரே, இந்த முடிவால் வருத்தமடைந்தார் மற்றும் அவரது மகனுக்கு ஆதரவாக வாதிட்டார். ஆதித்யா தனது மகன் மட்டுமல்ல, அதிகாரப்பூர்வ நெறிமுறைப்படி பிரதமர் மோடியை வரவேற்கக்கூடிய ஒரு கேபினட் மந்திரி ஆவார் என்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் அவர் கூறினார்.
இறுதியில், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் கடும் அதிருப்திக்குப் பிறகு, பிரதமர் மோடியை வரவேற்க ஆதித்யா தாக்கரே அனுமதிக்கப்பட்டார்.