ஷிண்டே அரசு கவிழ்ந்து மராட்டியத்தில் இடைத்தோதல் வரும்- ஆதித்ய தாக்கரே

மராட்டியத்தில் ஏக்நாத் ஷிண்டே அரசு கவிழ்ந்து, இடைத்தோதல் வரும் என ஆதித்யதாக்கரே பேசினார்.
ஷிண்டே அரசு கவிழ்ந்து மராட்டியத்தில் இடைத்தோதல் வரும்- ஆதித்ய தாக்கரே
Published on

ஆட்சி கவிழும்

சிவசேனா உத்தவ் தாக்கரே, ஏக்நாத்ஷிண்டே அணி என 2 ஆக உடைந்து உள்ளது. பெரும்பாலான எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஷிண்டே அணியில் உள்ளனர். இந்தநிலையில் சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே 'சிவ் சாம்வத் யாத்திரை' என்ற பெயரில் கடந்த 3 நாளாக தொண்டர்களை சந்தித்து வருகிறார்.

இதில் அவர் நேற்று அவுரங்காபாத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்து பேசினார். இதில் பைதான் பகுதியில் அவர் பேசியதாவது:- எனது வார்த்தையை குறித்து வைத்து கொள்ளுங்கள். இந்த அரசு விரைவில் கவிழ்ந்துவிடும். மராட்டியம் இடைத்தேர்தலை சந்திக்கும்.

கண்ணீர் வருகிறது

இந்த தொகுதி எம்.எல்.ஏ. சந்திபான் பும்ரே சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கு போதிய நிதி வழங்கப்படவில்லை என கூறியது தவறு. மரத்வாடா தண்ணீர் திட்டத்தின் கீழ் முதலில் பைதான் பகுதிக்கு தான் நிதி ஒதுக்கப்பட்டது. பும்ரேவுக்கு 5 முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தோம். இவர்களுக்கு செய்ததை எல்லாம் நினைத்து பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது. ஆனால் இது அழுவதற்கான நேரமல்ல. இது போராட வேண்டிய நேரம். மாநிலத்தில் கடந்த 2 வாரமாக பலத்த மழை பெய்கிறது. பலர் பலியானார்கள். ஆனால் 2 பேரால் இந்த அரசாங்கம் நடத்தப்பட்டு வருகிறது. எனது தந்தை உடல்நலம் சரியில்லாமல் இருந்த போது, சிவசேனாவில் பிளவை ஏற்படுத்திய 40 எம்.எல்.ஏ.க்களும் துரோகிகள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கொட்டும் மழையில்...

இதேபோல அகமத்நகர் மாவட்டத்தில் உத்தவ் தாக்கரே ஆதரவு கிராந்திகாரி சேட்காரி கட்சியின் எம்.எல்.ஏ.வான சங்கர்ராவ் கடக் தொகுதியான நேவசாவில் கொட்டும் மழையில் ஆதித்ய தாக்கரே பேசினார்.

அப்போது அவர், " உங்களுக்கு நண்பர்கள் இருந்தால், அவர்கள் சங்கர்ராவ் கடக் போல இருக்க வேண்டும். நமது சொந்த ஆட்களே துரோகம் செய்து துரோகிகளாக மாறினர். ஆனாலும் சங்கர்ராவ் கடக் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக இருப்பதில் உறுதியாக நின்றார். அரசு கவிழ்ந்த பின்னரும் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். உத்தவ் தாக்கரே ஆட்சி செய்த போது அரசியல் செய்யவில்லை. அவர் தனது எம்.பி., எம்.எல்.ஏ.க்களை வேவு பார்க்கவில்லை. நாங்கள் தொடர்ந்து இந்த தவறை செய்வோம். சிவசேனா தொண்டர்களை நம்பவில்லை என்றால், நாங்கள் வேறுயாரை நம்ப முடியும். கட்டாயப்படுத்தி அதிருப்தி அணிக்கு இழுக்கப்பட்டவர்கள் விரும்பினால் கட்சிக்கு திரும்பலாம்" என்றார்.

இதற்கிடையே சிவ் சாம்வத் யாத்திரையின் போது ஆதித்ய தாக்கரேவின் பேச்சை கேட்டு, தொண்டர் ஒருவர் கண்ணீர் சிந்தும் காட்சி சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com