மணிஷ் சிசோடியா கைது விவகாரம் புராண கதை, இந்தி சினிமாவை வைத்து ஆம் ஆத்மி-பா.ஜனதா வார்த்தை யுத்தம்

மணிஷ் சிசோடியா கைது விவகாரத்தில், புராண கதை மற்றும் இந்தி சினிமாவை வைத்து ஆம் ஆத்மி-பா.ஜனதா இடையே வார்த்தை யுத்தம் நடந்தது.
மணிஷ் சிசோடியா கைது விவகாரம் புராண கதை, இந்தி சினிமாவை வைத்து ஆம் ஆத்மி-பா.ஜனதா வார்த்தை யுத்தம்
Published on

புதுடெல்லி, 

டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா, மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிசோடியாவை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் புராணகால நாயகனான பிரகலாதனுடன் ஒப்பிட்டார். அவர் நேரடியாக சிசோடியாவை அவ்வாறு கூறாமல், மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக கெஜ்ரிவால் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

புராண கால மன்னர் இரண்ய கசிபு, தானே இறைவன் என நினைத்துக்கொள்ளத் தொடங்கினான். உண்மையான இறைவனின் வழியில் நடந்த பிரகலாதனை அதிலிருந்து தடுத்து நிறுத்த பல முயற்சிகள் செய்தான். அவன் மீது பல அராஜகங்கள் புரிந்தான்.

இன்றும்கூட சிலர் தங்களைத் தாங்களே கடவுளாக நினைத்துக்கொள்ளத் துவங்கியுள்ளனர். நாட்டுக்குச் சேவையாற்றும் 'பிரகலாதன்கள்' சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

புராணகாலத்தில் எப்படி பிரகலாதனை தடுத்து நிறுத்த முடியவில்லையோ, அப்படியே இப்போதும் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சற்று நேரத்தில், டெல்லி பா.ஜனதா இதற்கு இந்தி சினிமாவை வைத்து பதிலடி கொடுத்தது. 2001-ம் ஆண்டு வெளியான 'ஜோடி நம்பர் 1' என்ற இந்தி படத்தின் சுவரொட்டியை பர்வேஷ் வர்மா என்ற டெல்லி பா.ஜனதா பிரமுகர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டார்.

அதில், சஞ்சய்தத், கோவிந்தா ஆகியோர் கதாபாத்திரங்களில் ஜெயிலில் உள்ள சத்யேந்தர் ஜெயின், சிசோடியா ஆகியோரை சித்தரித்து இருந்தார். ''அரவிந்த் கெஜ்ரிவால் தயாரிப்பில், தற்போது திகார் சிறையில் இப்படம் ஓடுகிறது. இது தொடக்கம்தான். மூளையாக செயல்பட்ட கெஜ்ரிவாலும் விரைவில் ஜெயிலுக்கு போவார்'' என்று அவர் கூறி இருந்தார்.

இதைத்தொடர்ந்து, ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய்சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ஒரு தலைவர் பா.ஜனதாவில் சேர்ந்தால், அவர் உடனே 'அரிச்சந்திரன்' ஆகிவிடுகிறார். அவரை விட்டுவிட்டு மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள்.

மிகப்பெரிய ஊழல்வாதி, மிகப்பெரிய அதிகாரி ஆகிவிடுகிறார். இதுதான் பா.ஜனதாவின் புதிய கோஷம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com