

டெல்லி,
டெல்லியில் நாளை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட்ட உள்ள நிலையில் இந்த போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி கலந்துகொள்ள உள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக செயல்பட்டு சில முடிவுகளை எடுத்துள்ளதாக காங்கிரஸ், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மேலும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் நாளை டெல்லியில் போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த போராட்டத்திற்கு டெல்லி போலீசார் தடை விதித்துள்ளனர். ஆனால், தடையை மீறி போராட்டம் நடைபெறும் என சிஜேபி தெரிவித்துள்ளதால் டெல்லியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
அதேவேளை, டெல்லியில் நாளை நடைபெறும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், இந்த போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் கலந்துகொள்வார்கள் என்று அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.