ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆசம்கானுக்கு எதிராக வழக்குப்பதிவு

நடிகையும் ராம்பூர் தொகுதி பாஜக வேட்பாளருமான ஜெயப்பிரதா குறித்து ஆசம் கான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆசம்கானுக்கு எதிராக வழக்குப்பதிவு
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், தன்னை எதிர்த்து போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா, காக்கி நிற உள்ளாடை அணிந்துள்ளதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பொதுக்கூட்டத்தில் ஜெயப்பிரதா பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பேசிய ஆசம் கான், இங்கு 10 வருடங்களாக ஒருவர் மக்கள் பிரதிநிதியாக உள்ளார். ராம்பூர் மக்கள், உத்தர பிரதேச மக்கள் மற்றும் இந்திய மக்கள் அவரை புரிந்துகொள்ள 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் காக்கி உள்ளாடை அணிந்திருப்பதை 17 நாட்களில் அறிந்துகொண்டேன் என்றார்.

ஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவருக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆசம் கானின் கருத்து மிகவும் அருவருப்பான அவமானகரமான கருத்து என பாஜக செய்தித் தொடர்பாளர் சந்திர மோகன் கண்டித்தார். இதைவிட தரம் தாழ்ந்த அரசியல் இருக்க முடியாது என்றும், சமாஜ்வாடி கட்சியின் உண்மையான முகத்தை இது காட்டுவதாகவும் அவர் கூறினார். ஆசம் கானின் கருத்தை தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும் கண்டித்துள்ளார். சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆசம் கானுக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் கூறினார்.

இதற்கிடையில், ஆசம்கானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கு எதிராக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் போட்டியில் இருந்து விலக தயார் எனவும் யாரையும் பெயர் குறிப்பிட்டு தான் பேசவில்லை எனவும் ஆசம்கான் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com