குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை கைவிடுங்கள் - மாணவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

“குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை மாணவர்கள் கைவிட வேண்டும்” என்று பிரதமர் மோடி கூறினார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை கைவிடுங்கள் - மாணவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
Published on

சாஹெப்கஞ்ச்,

ஜார்கண்ட் மாநில இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டார். பார்ஹெட் உள்பட சில இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் பிரதமர் மோடி பேசியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து காங்கிரஸ் மக்களை தவறாக வழிநடத்துகிறது. அனைத்தும் அமைதியாக நடைபெறும்போது எதிர்க்கட்சியால் அதனை ஜீரணிக்க முடியவில்லை. இது அவர்களது வயிற்றுக்குள் எலிகள் ஓடுவதுபோல உள்ளது.

அனைத்து பாகிஸ்தானியருக்கும் இந்திய குடியுரிமை வழங்க விரும்புவதாக காங்கிரஸ் அறிவிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி தனது நிலையை அறிவிக்கட்டும், பின்னர் நடைபெற வேண்டியதை இந்த நாட்டு மக்கள் கவனித்துக் கொள்வார்கள். மக்களுக்கு மின்சாரம் தாக்கியதுபோல இருந்தது, நாடு கொந்தளிக்கும், தேசம் இரண்டாக கிழியும் என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள்.

காஷ்மீரில் பயங்கரவாதம் வேரூன்ற அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பயங்கரவாதிகளை ஒழிக்க எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் பா.ஜனதா 370-வது சட்டப்பிரிவை நீக்கும் முடிவை எடுத்தது. காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் வெளிப்படையாக தங்கள் அரசியல் அடிப்படையான பொய்களை பரப்பின. இப்போது காஷ்மீர் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. காஷ்மீர் பிரச்சினையில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எதிர்மறையான எண்ணங்களை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் புறக்கணித்துவிட்டார்கள்.

அதேபோல இப்போது மீண்டும் காங்கிரஸ் கூட்டணி பொய்களை பேசுவதுடன், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து மக்களை பயமுறுத்துகிறது. குறிப்பாக முஸ்லிம் மக்களை பயமுறுத்த தனது முழு பலத்தையும் செலவிடுகிறது. நாட்டில் பொய் மற்றும் அச்சம் நிறைந்த சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கின்றன.

குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில் உள்ள இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பார்சிக்கள் மீது எந்த தாக்கமும் ஏற்படாது என்பது தெள்ளத்தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனாலும் காங்கிரஸ் தவறான தகவல்களையும், பொய்களையும் நிறுத்தாமல் பரப்பி வருகிறது.

இந்த சட்டத்தை எதிர்த்து போராடும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, அரசுடன் தங்கள் பிரச்சினை குறித்து ஜனநாயக முறையில் பேசுவதற்கு முன்வர வேண்டும். நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்த நகரத்தில் உள்ள நக்சலைட்டுகள் இளைஞர்களை தூண்டிவிடுகிறார்கள். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com