ஜப்பான் பிரதமர் அபே, மோடி புல்லட் ரெயில் திட்ட தொடக்க விழாவில் பங்கேற்பு

2 நாள் பயணமாக ஆமதாபாத் வந்த ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயை பிரதமர் மோடி நேரில் வரவேற்றார். இருவரும் புல்லட் ரெயில் திட்ட தொடக்க விழாவில் இன்று கூட்டாக பங்கேற்கின்றனர்.
ஜப்பான் பிரதமர் அபே, மோடி புல்லட் ரெயில் திட்ட தொடக்க விழாவில் பங்கேற்பு
Published on

ஆமதாபாத்

2 நாள் பயணமாக ஆமதாபாத் வந்த ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயை பிரதமர் மோடி நேரில் வரவேற்றார். இருவரும் புல்லட் ரெயில் திட்ட தொடக்க விழாவில் இன்று கூட்டாக பங்கேற்கின்றனர்.

ஆமதாபாத் வந்தார் அபே

ஜப்பான் நாட்டின் பிரதமர் ஷின்ஜோ அபே, தனது மனைவி அகீ அபேயுடன் 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று குஜராத் மாநிலம், ஆமதாபாத் வந்து அடைந்தார்.

சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் தனி விமானத்தில் வந்து இறங்கிய ஷின்ஜோ அபே தம்பதியரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் வரவேற்றார்.

அதைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவுக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

ஊர்வலம்

வரவேற்பு முடிந்ததும் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே தம்பதியரை பிரதமர் மோடி சபர்மதி ஆசிரமத்திற்கு திறந்த ஜீப்பில் ஊர்வலமாக அழைத்து சென்றார். அவர்களை தொடர்ந்து வாகன அணிவகுப்பு சென்றது.

8 கி.மீ. தொலைவிலான இந்த பயணத்தின்போது சாலையின் இரு ஓரங்களிலும் பொதுமக்கள் கூடி நின்று, இரு தலைவர்களையும் வரவேற்று உற்சாகமாக கையசைத்தனர். இந்திய, ஜப்பான் தேசிய கொடிகளை அவர்கள் ஏந்தி இருந்தது இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.

வழி நெடுகிலும் 28 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு, இந்திய கலாசாரத்தை பறை சாற்றும் ஆடல், பாடல்களை கொண்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் கலந்து கொண்டனர். அதை தலைவர்கள் பார்த்து ரசித்தவாறு சென்றனர்.

சபர்மதி ஆசிரமத்துக்கு ஷின்ஜோ அபே தம்பதியரை அழைத்துச்சென்று, மகாத்மா காந்தி அங்கு நீண்டகாலம் தங்கி இருந்தது பற்றியும், அந்த ஆசிரமத்தின் சிறப்புகள் பற்றியும் எடுத்துக்கூறினார். அங்கு வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் ஷின்ஜோ அபே கையெழுத்திட்டார்.

பின்னர் சபர்மதி ஆற்றங்கரையோரம் மோடி, ஷின்ஜோ தம்பதியருடன் அமர்ந்து சிறிது நேரம் சாதாரண முறையில் கலந்துரையாடினார்.

இந்திய-ஜப்பான் உச்சி மாநாடு

இந்தியா, ஜப்பான் இரு நாடுகள் இடையேயான 12-வது உச்சி மாநாடு, இன்று காந்திநகர் மகாத்மா காந்தி மந்திரில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயும் கலந்து கொள்கின்றனர்.

அப்போது இரு தலைவர்களும், இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையிலான ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கான வழிமுறைகளை விவாதிப்பார்கள். இது எதிர்கால பயணத்துக்கான இலக்கை நிர்ணயிப்பதாக அமையும்.

புல்லட் ரெயில்

நாட்டிலேயே முதன்முதலாக ஆமதாபாத்- மும்பை இடையே அதிவேக புல்லட் ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று (வியாழக்கிழமை) நடைபெற இருக்கிறது. 508 கி.மீ. தொலைவிலான இந்த திட்டம் 2022-ம் ஆண்டு நிறைவு பெறும்.

இந்த திட்டத்துக்கு பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயும் அடிக்கல் நாட்டுகின்றனர்.

ஒப்பந்தங்கள் கையெழுத்து

தொடர்ந்து நண்பகல் வாக்கில் இரு தரப்பு அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது. அப்போது சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய- ஜப்பான் தொழில் அதிபர்கள் சந்திப்பும் நடக்கிறது. இதிலும் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே பங்கேற்பார். அப்போது ஜப்பான் தொழில் நிறுவனங்கள், இந்தியாவில் பெரிய அளவிலான முதலீடுகள் செய்வது பற்றிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com