

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபி மற்றும் ஏராளமான மாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், டெல்லியில் தேசியக் கொடி ஏந்தும் பேரணிக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அழைப்பு விடுத்திருந்தது.
இந்தப் பேரணி டெல்லி கனாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க் பகுதியில் நடைபெற இருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் பேரணியில் பங்கேற்கச் சென்ற அபிஜித் தீப்கேவை டெல்லி போலீசார் நேற்று தடுத்து நிறுத்தினர்.ஏற்கனவே, கடந்த அக்டோபர் 10-ந்தேதி அமைதியைப் பேணுவதாக அவர் அளித்திருந்த பிணை உறுதிமொழியை மீறியதாகக் கூறி, போலீசார் அவரைக் கைது செய்தனர்.
இதையடுத்து, அபிஜீத் தீப்கே டெல்லியில் உள்ள மந்திர் மார்க் காவல் நிலையத்தின் சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய மாஜிஸ்திரேட்டு, அவரை விடுவிக்க உத்தரவிட்டார்.