மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி அபுசலீம் திருமணத்துக்கு அனுமதி கோரி கோர்ட்டில் மனு

26 வயது இளம்பெண்ணை திருமணம் செய்ய தன்னை அனுமதிக்குமாறு கோரி மும்பை கோர்ட்டில் அபுசலீம் மனு தாக்கல் செய்துள்ளார்.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி அபுசலீம் திருமணத்துக்கு அனுமதி கோரி கோர்ட்டில் மனு
Published on

மும்பை,

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் நிழல் உலக தாதா அபுசலீம் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என்று தடா கோர்ட்டு சமீபத்தில் அறிவித்தது.

தண்டனை மீதான வாதம் தற்போது நடைபெற்று வருகிறது. அபுசலீம் மீதான குற்றத்தின் தீவிரத்தன்மையை சுட்டிக்காட்டி அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்குமாறு சி.பி.ஐ. வக்கீல் வாதிட்டார். அபுசலீம் கடந்த 2015ம் ஆண்டு மற்றொரு வழக்கில் ஆஜராவதற்காக உத்தர பிரதேச மாநிலம் லக்னோ கோர்ட்டுக்கு ரெயிலில் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டபோது, அவருக்கும், 26 வயது இளம்பெண் ஒருவருக்கும் ரெயிலிலேயே ரகசிய திருமணம் நடைபெற்றதாக செய்தி சேனல்களில் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இந்த புகைப்படத்தால் தன்னுடைய எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிட்டதாகவும், தன்னை திருமணம் செய்ய யாரும் முன்வரவில்லை என்றும், இதனால் அபுசலீமையே தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி மும்பை தடா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த பெண்ணுக்கு தன்னால் ஏற்பட்ட களங்கத்தை போக்க எண்ணிய அபுசலீம், அவரை திருமணம் செய்ய முன்வந்தார். இதைத்தொடர்ந்து, திருமணத்துக்கு தன்னை இடைக்கால ஜாமீன் அல்லது பரோலில் வெளியே செல்ல அனுமதிக்குமாறு கோரி விசாரணை கோர்ட்டில் அபுசலீம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அத்துடன், இதுபோன்ற வழக்குகளில் ஏற்கனவே மும்பை மற்றும் டெல்லி ஐகோர்ட்டுகள் பிறப்பித்த உத்தரவின் நகலும் உதாரணத்துக்காக இணைக்கப்பட்டிருக்கிறது. இதனை பரிசீலித்த நீதிபதி ஜி.ஏ.சனப், இதற்கு சி.பி.ஐ. பதில் அளிக்க உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com