வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்த மசோதா நிறைவேறியது

நாடாளுமன்றத்தின் இருசபைகளிலும் வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.
வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்த மசோதா நிறைவேறியது
Published on

புதுடெல்லி,

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தவர் (எஸ்.சி. மற்றும் எஸ்.டி. இனத்தவர்) மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளில், புகாருக்கு ஆளாகிறவர்களை கைது செய்வதற்கு முன்பாக, துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்துக்கு குறைவு இல்லாத அதிகாரி கண்டிப்பாக முதல் கட்ட விசாரணை நடத்த வேண்டும்; உயர் அதிகாரியின் ஒப்புதலை முன்கூட்டி பெற்றுத்தான் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 20ந் தேதி உத்தரவிட்டது.

இது அந்த சட்டத்தை நீர்த்துப்போகச்செய்யும் முயற்சி என கருத்துக்கள் எழுந்தன. வட மாநிலங்களில் கண்டன போராட்டங்கள் நடைபெற்றன.

இதையடுத்து 1989ம் ஆண்டு இயற்றப்பட்ட தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் (எஸ்.சி. மற்றும் எஸ்.டி. இனத்தவர்) மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கடுமையான அம்சங்களை கொண்டு வந்து, உரிய திருத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

இதற்கான மசோதா நாடாளுமன்ற மக்களவையில் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு இந்த மசோதா கடந்த திங்கட்கிழமை நிறைவேறியது.

அந்த மசோதா மாநிலங்களவையிலும் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்மீது நேற்று நடந்த விவாதத்துக்கு சமூக நீதி மற்றும் அதிகார வழங்கல் துறை மந்திரி தாவர் சந்த் கெல்லாட் பதில் அளித்துப் பேசினார்.

அப்போது அவர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் (எஸ்.சி. மற்றும் எஸ்.டி. இனத்தவர்) மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிப்பதற்கு மாவட்ட அளவில் தனிக்கோர்ட்டுகள் அமைக்க மசோதாவில் வகை செய்யப்பட்டு உள்ளது; அந்த வகையில் 195 கோர்ட்டுகளை அமைப்பதற்கு 14 மாநிலங்கள் முன்வந்து உள்ளன என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து குரல் ஓட்டு மூலம் மசோதா நிறைவேறியது.

நாடாளுமன்றத்தின் இருசபைகளிலும் இந்த மசோதா நிறைவேறி விட்ட நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளித்து கையெழுத்து போட்டதும் மசோதா, சட்டம் ஆகி விடும். அதைத் தொடர்ந்து நடைமுறைக்கு வந்து விடும்.

அதன்பின்னர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழான வழக்கில் சிக்குவோரை கைது செய்வதற்கு புலனாய்வு போலீஸ் அதிகாரி, உயர் அதிகாரியின் ஒப்புதலை பெறத் தேவை இல்லை; வழக்கு பதிவு செய்வதற்கு முதல் நிலை விசாரணை நடத்த வேண்டியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com