

புதுடெல்லி,
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் 2017ம் ஆண்டு நடைபெற்றது. இந்த தேர்வை தனியார் நிறுவனமான சிபி டெக்னாலஜிஸ் நடத்தியது. இந்த தேர்வில் கேள்வித்தாள் முன்னதாகவே வெளியானதாகவும், இதனால் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் தேர்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டது. இந்த தேர்வை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஏற்கனவே தேர்வு முடிவை வெளியிட தடை விதித்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இரவு பகலாக படித்து பலர் தேர்வை நேர்மையாக எழுதியிருப்பார்கள். அவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்த தேர்வை ரத்து செய்வதாகவும், அரசு துறைகளான தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) அல்லது சி.பி.எஸ்.இ. ஆகியவை மறுதேர்வை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.