மந்திரி அரக ஞானேந்திரா வீட்டுக்குள் நுழைய முயன்ற ஏ.பி.வி.பி. மாணவ அமைப்பினர்

பிரவீன் நெட்டார் கொலையை கண்டித்து பெங்களூருவில் உள்ள போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா வீட்டுக்குள் நுழைய முயன்ற ஏ.பி.வி.பி. மாணவ அமைப்பினர் மீது போலீசார் தடியடி நடத்தியதுடன் 40 பேரை கைது செய்து உள்ளனர்.
மந்திரி அரக ஞானேந்திரா வீட்டுக்குள் நுழைய முயன்ற ஏ.பி.வி.பி. மாணவ அமைப்பினர்
Published on

பெங்களூரு:

பிரவீன் நெட்டார் கொலை

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே நெட்டார் கிராமத்தை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் கடந்த சில தினங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஜாகீர், ஷபிக் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலை சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் பா.ஜனதாவினர், ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் பா.ஜனதா பிரமுகர்கள் அரசை கண்டித்து தங்களது பதவிகளையும் ராஜினாமா செய்து வருகின்றனர்.

பிரவீன் நெட்டார் கொலைக்கு பொறுப்பு ஏற்று மாநில போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து உள்ளன. இந்த நிலையில் பெங்களூரு ஜெயமகாலில் உள்ள போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா வீட்டின் முன்பு நேற்று காலை ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினர் திரண்டனர். அப்போது அவர்கள் பிரவீன் நெட்டார் கொலையை கண்டித்தும், பிரவீன் நெட்டார் சாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். மேலும் பி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

போலீஸ் மந்திரி வீட்டிற்குள் நுழைய முயற்சி

இந்த சந்தர்ப்பத்தில் அரக ஞானேந்திரா வீட்டை முற்றுகையிட்டு மாணவர் அமைப்பினர் வீட்டுக்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் வெறும் 3 போலீசார் மட்டுமே ஈடுபட்டு இருந்தனர். அவர்கள், மாணவர் அமைப்பினரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனாலும் போராட்டக்காரர்கள் நுழைவு வாயில் கேட்டை தள்ளி கொண்டு அரக ஞானேந்திராவின் வீட்டின் வளாகத்திற்குள் புகுந்தனர். பின்னர் கதவை திறந்து அரக ஞானேந்திரா வீட்டிற்குள் செல்ல முயன்றனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஜே.சி.நகர் போலீசார், மந்திரி அரக ஞானேந்திரா வீட்டுக்கு விரைந்து வந்து ஏ.பி.வி.பி. அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லும்படியும் கேட்டு கொண்டனர். ஆனால் இதனை மாணவர் அமைப்பினர் ஏற்க மறுத்ததுடன், அரக ஞானேந்திரா வீட்டிற்குள் செல்ல கதவை திறக்க முயன்றனர். இதனால் போலீசாருக்கும், ஏ.பி.வி.பி. அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு உண்டானது. அப்போது அங்கு இருந்த பூச்செடிகள் விழுந்து நொறுங்கின.

போலீசார் தடியடி

இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தடியடி நடத்தினர். இதனால் மாணவர் அமைப்பினர் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதன்காரணமாக அங்கு பரபரப்பு உண்டானது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை ஜே.சி.நகர் போலீசார் கைது செய்தனர். அவர்களில் 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் கூடுதல் கமிஷனர் (மேற்கு) சந்தீப் பட்டீல் அரக ஞானேந்திரா வீட்டிற்குள் விரைந்து சென்று போலீசாரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜினாமா செய்ய வேண்டும்

அப்போது ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினர் கூறும்போது, 'நாங்கள் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவை சந்தித்து மனு கொடுக்க தான் வந்தோம். ஆனால் எங்களை அனுமதிக்க போலீசார் மறுத்ததேடு எங்கள் மீது தேவையில்லாமல் தடியடி நடத்தினர். மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி இருந்தும் தெண்டர்களை பாதுகாக்க அரசு தவறி விட்டது.

பிரவீன் நெட்டார் கொலைக்கு பொறுப்பு ஏற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தினர்.

உளவுத்துறை தோல்வி- போலீஸ் கமிஷனர் ஒப்புதல்

போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா வீட்டிற்குள் ஏ.பி.வி.பி. அமைப்பினர் நுழைய முயன்றது குறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், 'போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா வீட்டின் முன்பு ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்த இருந்தது பற்றி எங்களுக்கு தகவல் இல்லை. இந்த விஷயத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டது. ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினர் மனு கொடுக்க வேண்டும் என்று வந்து தான் போராட்டம் நடத்தி உள்ளனர். சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி வடக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது' என்றார்.

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை- சந்தீப் பட்டீல்

இந்த போராட்டம் குறித்து கூடுதல் கமிஷனர் சந்தீப் பட்டீல் கூறுகையில், 'பிரவீன் நெட்டார் கொலை விவகாரம் தொடர்பாக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவிடம் மனு கொடுக்க வந்து உள்ளதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 3 போலீசாரிடம், ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினர் கூறியுள்ளனர். ஆனால் திடீரென போலீஸ் மந்திரி வீட்டின் முன்பு போராட்டம் நடத்தியதுடன், அவரது வீட்டை முற்றுகையிட்டு உள்ளே நுழையவும் முயன்று உள்ளனர். ஆனாலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளனர். போலீஸ் மந்திரி வீட்டிற்குள் நுழைய முயன்றதாக 40 பேரை கைது செய்து உள்ளோம். அவர்கள் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டியிடம் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com