

ஐதராபாத்,
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு ஐக்கிய அரபு எமிரெட்ஸ் 700 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. ஆனால் இவ்வளவு பெரிய தொகையை ஏற்க மத்திய அரசின் அனுமதி தேவை உள்ளது.
இந்த விஷயத்தில் மத்திய அரசு இன்னமும் முடிவெடுக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வளைகுடா நாடுகளில் பணியாற்றிய இந்தியாவின் முன்னாள் தூதர் பேசுகையில், கேரளாவிற்கு ஐக்கிய அரபு எமிரெட்ஸ் நிதியுதவி வழங்குவது நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஆனால், இவ்வளவு பெரிய தொகையை பெறுவதில் பிரச்சனை உள்ளது என்று கூறியுள்ளார்.
சவுதி அரேபியா, ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரெட்ஸ் நாடுகளில் இந்திய தூதராக பயணியாற்றிய தல்மிஸ் அகமது பேசுகையில், பேரிடர் காலங்களில் வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் வழங்கும் நிதி தூதரகத்தால் சேகரிக்கப்பட்டு, ஆர்பிஐ டிராப்ட் மூலம் இந்தியாவிற்கு வரும். வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் நிதியுதவி செய்வதை பார்த்து இருக்கிறேன். இவ்வளவு பெரிய தொகையை ஒருதேசம் வழங்கியது என்பது இப்போதுதான், இதுபோன்ற உதவி ஒருபோதும் வழங்கப்படவில்லை. கடந்த காலங்களில் சிலநாடுகள் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது. 2001-ல் குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது சவுதி அரேபியா மூன்று விமானங்களில் நிவாரணப் பொருட்களை அனுப்பியது. என்னுடைய நினைவுக்கு எட்டிய வண்ணம், இதுபோன்ற பெருமளவு தொகையை எந்தஒரு தனி தேசமும் வழங்கியது கிடையாது. இது மக்களை பார்த்துக்கொள்வதில் இந்தியாவிடம் நிதிப்பற்றாக்குறை என்பது போன்றதாகிறது. இப்போது உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கும் தேசங்கள் அடிப்படையில் என்ன தேவை என்பதை பார்க்க வேண்டும். முன்னதாகவே ஐக்கிய அரபு எமிரெட்ஸ், இந்திய அரசுடன் ஆலோசனையை மேற்கொண்டதா என்பது தெரியவில்லை. ஆனால் இவ்வளவு பெரிய தொகையை மற்றொரு நாட்டிடம் இருந்து உதவியாக பெறுவதில் பிரச்சனையுள்ளது என்று கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரெட்ஸ் நிவாரணப் பொருட்களை அனுப்புவதில் நாட்டம் காட்டாமல் பணம் அனுப்புகிறது என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், கேரளாவில் பெருமளவு அழிவு ஏற்பட்டுள்ளது என்பதை அதிகாரிகள் செய்தித்தாள்களில் பார்த்து உள்ளார்கள், அப்போது உதவி செய்ய வேண்டும் ஏதாவது செய்ய வேண்டும் என்று முயற்சியை மேற்கொண்டுள்ளனர். வளைகுடா நாடுகளில் உள்ள 40 சதவித இந்தியர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதை மறக்க கூடாது. 8 மில்லியன் பேரில் (வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்கள்) 3.5 மில்லியன் பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து யார் நிதி பெற வேண்டும் என்றாலும் இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் முறையான அனுமதியை பெற வேண்டியது அவசியமானது. மேலும், வெளிநாடுகள் சார்பில் அளிக்கப்படும் இதுபோன்ற நிதியை பெறுவதற்கு மத்திய அரசின் கொள்கை முடிவும் அவசியமானது. மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே கேரள அரசால் இந்த நிதியை பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு முன்பு இயற்கை பேரிடர் நடந்தபோது வெளிநாடுகள் நிதி அளிக்க முன்வந்தது, ஆனால் மத்திய அரசு அதனை ஏற்க மறுப்பு தெரிவித்தது. இப்போது ஐக்கிய அரபு எமிரெட்ஸ் விவகாரத்தில் மத்திய அரசு இன்னமும் முடிவெடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.