வர்த்தகம், வாழ்க்கை போல் நீதி எளிதில் கிடைப்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது; பிரதமர் மோடி

வர்த்தகம் மேற்கொள்வது மற்றும் வாழ்க்கைக்கான விசயங்கள் எளிதில் கிடைப்பது போல் நீதி எளிதில் கிடைப்பதும் சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
வர்த்தகம், வாழ்க்கை போல் நீதி எளிதில் கிடைப்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது; பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

டெல்லி விஞ்ஞான் பவனில், நாட்டின் முதல் அகில இந்திய மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய தொடக்க நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா கலந்து கொண்டார்.

அவருடன், நீதிபதிகள் உதய் யூ. லலித், டி.ஒய். சந்திரசூட் மற்றும் மத்திய சட்ட துறை மந்திரி கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். தேசிய சட்ட சேவைகள் ஆணையம் சார்பில் டெல்லி விஞ்ஞான் பவனில், தேசிய அளவிலான இந்த முதல் சட்ட சேவைகள் ஆணையத்தின் கூட்டம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, தற்போது எடுக்கும் தீர்மானங்கள், நாட்டை அடுத்த 25 ஆண்டுகளுக்கு புதிய உச்சத்திற்கு எடுத்து செல்லும் காலமிது. இது சுதந்திரத்திற்கான அமுதம் கிடைப்பதற்கான நாள். நாட்டின் இந்த அமுத பயணத்தில், வர்த்தகம் மேற்கொள்வது எளிமையாக்கப்பட்டது போல், வாழ்வது எளிமையாக்கப்பட்டது போல், நீதியானது எளிதில் கிடைக்க செய்வதும் சமஅளவில் முக்கியத்துவம் வாய்ந்தது என கூறியுள்ளார்.

நீதிமன்ற நடைமுறையை எந்த ஒரு சமூகமும் அணுகுவதற்கான உரிமை முக்கியத்துவம் பெறுவது போல், நீதி கிடைக்க செய்வதும் சம முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்கு, நீதிமன்ற உட்கட்டமைப்புகளும் ஒரு முக்கிய பங்காற்றுகிறது.

கடந்த 8 ஆண்டுகளில், நாட்டில் நீதிமன்ற உட்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான பணிகள் விரைவாக நடந்துள்ளன.

இ-கோர்ட்டுகள் இயக்கத்தின் கீழ், மெய்நிகர் கோர்ட்டுகள் தொடங்கப்பட்டு உள்ளன. போக்குவரத்து விதிமீறல்கள் போன்ற குற்றங்களுக்காக, 24 மணிநேர கோர்ட்டுகளும் தொடங்கப்பட்டு உள்ளன. மக்களின் வசதிக்காக, காணொலி காட்சி உட்கட்டமைப்புகளும் கோர்ட்டில் விரிவுப்படுத்தப்பட்டு உள்ளன என பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com