காங்கிரஸ் ஆட்சியில் பேசப்பட்டதை விட பா.ஜனதா அரசு ஒப்பந்தப்படி, ரபேல் போர் விமான விலை குறைவு - தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கையில் பரபரப்பு தகவல்

காங்கிரஸ் ஆட்சியில் பேசப்பட்டதை விட, பா.ஜனதா அரசு செய்த ஒப்பந்தப்படி ரபேல் போர் விமான விலை குறைவானது என்று தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் பேசப்பட்டதை விட பா.ஜனதா அரசு ஒப்பந்தப்படி, ரபேல் போர் விமான விலை குறைவு - தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கையில் பரபரப்பு தகவல்
Published on

புதுடெல்லி,

மன்மோகன்சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசில் பேசப்பட்டதைவிட, தற்போதைய பா.ஜனதா கூட்டணி அரசில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தப்படி ரபேல் போர் விமான விலை அதிகம் என்ற புகார் கூறப்பட்டு வந்தது.

குறிப்பாக காங்கிரஸ் கட்சி இந்த புகாரை கூறி வந்தது.

இந்த நிலையில் ரபேல் போர் விமான பேரம் தொடர்பான இந்திய தலைமை கணக்கு தணிக்கையர் (சி.ஏ.ஜி.) அறிக்கை, நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி, காங்கிரஸ் ஆட்சியில் பேசப்பட்டதை விட தற்போதைய பா.ஜனதா அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தப்படி ரபேல் போர் விமானத்தின் விலை 2.86 சதவீதம் மலிவானது என தெரியவந்துள்ளது.

இந்தியா கேட்ட குறிப்பிட்ட மேம்பாடுகளின் அடிப்படையிலும், ரபேல் போர் விமான ஒப்பந்தம் 17.08 சதவீதம் மலிவானது எனவும் சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் பொறியியல் ஆதரவு அம்சங்கள் மற்றும் செயல்திறன் அடிப்படையிலான தளவாடங்கள் அடிப்படையில் பார்த்தால் ரபேல் போர் விமான ஒப்பந்தம் 6.54 சதவீதம் அதிகமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

36 ரபேல் போர் விமானங்கள் கொள்முதலை பொறுத்தவரையில், சேவைகள் மற்றும் தயாரிப்பு செயல்பாட்டு ஆதரவு ஆகியவற்றின் அடிப்படையில் பா.ஜனதா ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தப்படியான விலை, முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பேசப்பட்டதை விட 4.77 சதவீதம் மலிவானது.

இந்த தகவல்கள் பாரதீய ஜனதா கூட்டணி அரசுக்கு நிம்மதியைத் தந்துள்ளது.

மாநிலங்களவையில் இந்த சி.ஏ.ஜி. அறிக்கையை நிதித்துறை ராஜாங்க மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.

அதையடுத்து இந்த அறிக்கையை பாரதீய ஜனதா மூத்த தலைவரும் மத்திய மந்திரியுமான அருண் ஜெட்லி வரவேற்றுள்ளார்.

இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், வாய்மையே வெல்லும். ரபேல் போர் விமான பேரம் தொடர்பான சி.ஏ.ஜி. அறிக்கை, எங்கள் கருத்தை மறு உறுதி செய்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com