ரூ.7.6 கோடி சொத்து குவிப்பு: புலிகள் காப்பக அதிகாரி வீட்டில் சோதனை

சஞ்சீவ் குமார் சர்மாவின் வங்கிக் கணக்குகள் மற்றும் முதலீடுகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.7.6 கோடி சொத்து குவிப்பு: புலிகள் காப்பக அதிகாரி வீட்டில் சோதனை.
பணம்-நகை பறிமுதல்
Published on: 

போபால்,

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், மத்தியப் பிரதேச மாநிலம் சத்புரா புலிகள் காப்பகத்தின் உதவி இயக்குநர் ஒருவருக்குச் சொந்தமான இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் நடத்திய சோதனையில் ரூ.7.6 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ரகசியத் தகவல்

மத்தியப் பிரதேச மாநிலம், பச்மரியில் உள்ள சத்புரா புலிகள் காப்பகத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருபவர் சஞ்சீவ் குமார் சர்மா. இவர் தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக போபால் கோட்ட லோக் ஆயுக்தா சிறப்புக் காவல் பிரிவினருக்கு ரகசியப் புகார்கள் வந்தன.

அதிகாலை முதல் அதிரடி சோதனை

இதன் அடிப்படையில், கடந்த 14-ம் தேதி அதிகாலை 7 மணிக்கு லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிரடி சோதனையைத் தொடங்கினர். நர்மதாபுரம் மாவட்டம் பச்மரியில் உள்ள சர்மாவின் அரசு குடியிருப்பு, அலுவலகம் மற்றும் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள அவருக்கு சொந்தமான தனிப்பட்ட வீடு ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடைபெற்றது.

கட்டுக்கட்டாகப் பணம், கிலோ கணக்கில் தங்கம்

மணிக்கணக்கில் நீடித்த இந்த சோதனையில், சஞ்சீவ் குமார் சர்மா தனது பணிக்காலத்தில் ஈட்டிய நேர்மையான வருமானத்தை விட சுமார் 560 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையின் முடிவில் ரூ.26.36 லட்சம் ரொக்கப் பணம், சுமார் ரூ.3.5 கோடி மதிப்பிலான 2.5 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.2.9 லட்சம் மதிப்பிலான 1.6 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதிகாரிகள் விசாரணை

மேலும், பல்வேறு இடங்களில் வாங்கிக் குவிக்கப்பட்ட 28 நிலப் பத்திரங்கள் மற்றும் சொகுசு கார் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் என மொத்தம் ரூ.7.6 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லோக் ஆயுக்தா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சஞ்சீவ் குமார் சர்மாவின் வங்கிக் கணக்குகள் மற்றும் முதலீடுகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X