உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் படிப்பை தொடர நடவடிக்கை மத்திய அரசு உறுதி

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்கள் தங்கள் மருத்துவ படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் படிப்பை தொடர நடவடிக்கை மத்திய அரசு உறுதி
Published on

புதுடெல்லி,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து, உக்ரைனில் படித்து வந்த இந்திய மாணவர்கள் விமானம் மூலம் மீட்டு வரப்பட்டனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவம் படித்து வந்தவர்கள். அவர்கள் தங்கள் படிப்பை தொடருவது எப்படி என்பது விவாத பொருளாக மாறி இருக்கிறது.

கொள்கை வகுத்துள்ளதா?

இந்தநிலையில், நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி தொடங்கியது. முதல் நாளிலேயே இப்பிரச்சினையை உறுப்பினர்கள் எழுப்பினர்.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகாய், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்கள் தங்கள் மருத்துவ படிப்பை தொடர மத்திய அரசு ஏதேனும் கொள்கை வகுத்துள்ளதா? பல்கலைக்கழகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதா? என்று கேட்டார்.

படிப்பை தொடர நடவடிக்கை

அதற்கு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

இந்திய மாணவர்களை மீட்டு வந்திருக்கும்போது, இதை பற்றியெல்லாம் நாங்கள் சிந்தித்து இருப்போம் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த மாணவர்கள், எதிர்காலத்தில் டாக்டர் ஆவதற்கு என்னென்ன தேவையோ, அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது பற்றி மத்திய அரசு சிந்தித்து வருகிறது.

தற்போதைய நிலையில், முதலில் அவர்கள் அதிர்ச்சியில் இருந்து வெளியே வர வேண்டும். அந்த பணியில் ஈடுபட்டுள்ளோம்.

பிரதமர் மோடி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் கங்கா மீட்பு திட்டத்துக்காக பிரதமருக்கு காங்கிரஸ் கட்சியும், இந்த அவையும் பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேரள மாணவர்கள் தவிப்பு

கேள்வி நேரம் முடிந்த பிறகு, மக்களவையில் இந்த பிரச்சினையை காங்கிரஸ் உறுப்பினர் ராஜ்மோகன் உன்னிதன் எழுப்பினார்.

கேரளாவை சேர்ந்தஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்னும் உக்ரைன்நாட்டின் சுமி நகரில் சிக்கி தவிப்பதாகவும், அவர்களை மீட்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

காங்கிரசின் மற்றொரு உறுப்பினர் அப்துல் காலிக் பேசியதாவது:-

போர் தொடங்கும் வரை காத்திருக்காமல், மீட்பு நடவடிக்கையை முன்கூட்டியே ஆரம்பித்திருக்க வேண்டும். உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு மாணவர்கள் தாங்களாகவே போய்ச் சேர்ந்துள்ளனர். எனவே, போர்க்களத்தில் இருந்து மாணவர்களை மீட்டதுபோல், மத்திய அரசு பேசக்கூடாது.

கல்வி கடன் ரத்து

மாணவர்களின் எதிர்காலம் நிச்சயமின்றி இருக்கிறது. எனவே, அவர்களை இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பயிற்சி மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கொடிக்குன்னில் சுரேஷ் (காங்கிரஸ்), ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி.க்கள் மிதுன் ரெட்டி, சீனிவாசலு ரெட்டி ஆகியோரும் இதே கருத்தை வலியுறுத்தினர். உக்ரைனில் படிக்க வாங்கிய கல்வி கடன்களை ரத்து செய்யுமாறும் கேட்டுக்கொண்டனர்.

மாநிலங்களவை

மாநிலங்களவையில், தெலுங்கு தேசம் உறுப்பினர் ரவீந்திர குமார் இப்பிரச்சினையை எழுப்பினார்.

பிஜூ ஜனதாதள உறுப்பினர் அமர் பதக் பேசுகையில், தனியார், அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ இடங்கள் எண்ணிக்கையை 2 முதல் 5 சதவீதம் உயர்த்தி, இந்த மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம் என்று யோசனை தெரிவித்தார்.

கே.சி.வேணுகோபால் (காங்கிரஸ்), சாந்தனு சென் (திரிணாமுல் காங்கிரஸ்) ஆகியோரும் இந்த கோரிக்கையை விடுத்தனர். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர், இப்பிரச்சினையை விவாதிக்க நோட்டீஸ் கொடுத்திருந்தனர்.

ஜெய்சங்கர் அறிக்கை

பின்னர், சபை தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது:-

இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகளும், இதர நடைமுறைகளும் உறுப்பினர்களுக்கு நன்றாக தெரியும். இது கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினை என்பதில் நான் உடன்படுகிறேன். ஆனால், இது சிக்கலான பிரச்சினை.

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், உக்ரைன் விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்வார். அதன்பிறகு இதுகுறித்து விவாதம் நடத்தலாம்.

உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை மீட்டது ஒரு சவாலான வேலை. மத்திய அரசின் முயற்சி பாராட்டுக்குரியது.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com