

அமைச்சர் ஆய்வு
புதுவை லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக அமைச்சர் லட்சுமிநாராயணன் நேற்று விமான நிலையத்தில் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது அரசு செயலாளர் விக்ராந்த் ராஜா, சுற்றுலாத்துறை இயக்குனர் பிரியதர்ஷினி, தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, விமான நிலைய இயக்குனர் விஜய் உபாத்யாயா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதைத்தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் லட்சுமிநாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக நிலம்
புதுவை விமான நிலைய ஓடுதளத்தை விரிவுபடுத்த வேண்டியுள்ளது. இதற்காக தமிழக பகுதியில் 104 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதுபற்றி தமிழக அரசிடம் பேச உள்ளோம்.ஏற்கனவே கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நிலம் ஒதுக்க கோரியுள்ளார். இதுதொடர்பாக அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து நானும் தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து வலியுறுத்துவேன்.2-வது கட்டமாக கூடுதலாக 217 ஏக்கர் நிலம் கேட்க உள்ளோம். தற்போதுள்ள ஓடுதளத்தில் இரவு நேரத்திலும் விமானங்களை இயக்க முடியும். இதற்காக
அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
சேலம்- கொச்சி
தற்போது 1,500 மீட்டர் நீளத்துக்கு விமான ஓடுதளம் உள்ளது. இதை 3 ஆயிரத்து 330 மீட்டர் ஓடுதளமாக மாற்ற உள்ளோம். புதுவையில் இருந்து ஐதராபாத், பெங்களூருவுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. மேலும் சேலம், கொச்சி போன்ற இடங்களுக்கு விமான சேவையை தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். புதுவையில் இருந்து விமான சேவையை மீண்டும் தொடங்க கேட்டுள்ளோம்.
இவ்வாறு அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறினார்.