

புதுடெல்லி,
சீன கடற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ள எம்.வி. ஜாக் ஆனந்த் மற்றும் எம்.வி. அனஸ்தாசியா என்ற 2 சரக்கு கப்பல்களை கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை காரணம் காட்டி, துறைமுகத்துக்கு உள்ளே சீனா அனுமதிக்கவில்லை. இந்த கப்பல்களில் இந்திய மாலுமிகள் 39 பேர் பல மாதங்களாக சிக்கியிருக்கின்றனர். அவர்களை மீட்கவோ, அந்த மாலுமிகளுக்கு பதிலாக வேறு மாலுமிகளை நியமிப்பதற்கோ சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.
பல மாதங்களாக சிக்கியிருப்பதால் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஆளாகி இருக்கும் இந்த மாலுமிகளை மீட்பதற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு சீனாவிடம் இந்தியா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறது.
இது தொடர்பாக நேற்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த பிரச்சினையில் நமது தூதர் விக்ரம் மிஸ்ரி, சீன துணை வெளியுறவு மந்திரியை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினார். அப்போது கப்பல்களில் ஊழியர்களை மாற்றுவதற்கு விரைவில் அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த விவகாரத்தில் வெளியுறவு அமைச்சகமும் சீனாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது என்று தெரிவித்தார்.
இதில் சீன அதிகாரிகளின் பதிலுக்காக காத்திருப்பதாக கூறிய ஸ்ரீவத்சவா, இது தொடர்பாக தகுந்த துறையுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கப்போவாகவும் உறுதியளித்தார்.