தீர்ப்பை மதிப்பதாக காரியகமிட்டி தீர்மானம்: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு காங்கிரஸ் ஆதரவு

அயோத்தி வழக்கின் தீர்ப்பை மதிப்பதாக காங்கிரஸ் காரியகமிட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு அளிப்பதாகவும் அந்த கட்சி அறிவித்து உள்ளது.
தீர்ப்பை மதிப்பதாக காரியகமிட்டி தீர்மானம்: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு காங்கிரஸ் ஆதரவு
Published on

புதுடெல்லி,

அயோத்தி வழக்கில் நேற்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, அங்கு சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்தது. மேலும் முஸ்லிம்களுக்கு தனியாக 5 ஏக்கர் நிலம் வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டது.

நாடு முழுவதும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள், மத குருக்கள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். அந்தவகையில் காங்கிரஸ் கட்சியும் இந்த தீர்ப்பை மதிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டு உள்ளது.

இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பை வழங்கி இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நாம் அனைவரும் மதித்து, பரஸ்பரம் நல்லிணக்கத்தை பேண வேண்டும். அனைத்து இந்தியர்களிடையே அன்பு, நம்பிக்கை, சகோதரத்துவம் பேண வேண்டிய நேரமிது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதைப்போல கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது டுவிட்டரில், அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைத்து மதத்தினர், கட்சியினர் மற்றும் குடிமக்கள் என அனைவரும் மதிப்பதுடன், நாட்டின் நூற்றாண்டு கால கலாசாரமான ஒன்றுமையையும் கடைப்பிடிக்க வேண்டும். பரஸ்பர நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை அனைவரும் வலிமையுடன் பேண வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கிடையே அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானதும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அந்த கட்சியின் காரியக்கமிட்டி கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில், தீர்ப்பின் அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னர் இந்த தீர்ப்பை மதிப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என வேண்டுகோளும் அதில் விடுக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக, இந்திய அரசியல் சாசனம் பேணும் மதசார்பற்ற மதிப்பீடுகள் மற்றும் சகோதரத்துவ வலிமையை அனைவரும் மதிக்க வேண்டும் எனவும், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேண வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, இந்த தீர்மானம் குறித்து விவரித்தார். அப்போது அவரிடம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்குமா? என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

நிச்சயமாக ஆம். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு காங்கிரஸ் ஆதரவளிக்கிறது. அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. இது நிச்சயமாக எந்த ஒரு தனி மனிதருக்கோ, குழுவுக்கோ, மதத்துக்கோ, அரசியல் கட்சிக்கோ வெற்றியோ, தோல்வியோ அல்ல.

சுப்ரீம் கோர்ட்டின் இன்றைய முடிவு ராமர் கோவில் கட்டுவதற்கு வழியை திறந்திருக்கிறது. அதேநேரம் நாட்டின் நம்பிக்கையை மையமாக வைத்து பா.ஜனதா உள்ளிட்ட சிலர் அரசியல் செய்வதற்கு நிரந்தரமாக கதவுகளை மூடி இருக்கிறது. இவ்வாறு ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com