நடிகர் அர்ஜூன் மீதான பாலியல் புகார் வழக்கு: நீதிபதி முன்னிலையில் நடிகை சுருதி ஹரிகரன் வாக்குமூலம்

நடிகர் அர்ஜூன் மீதான பாலியல் புகார் வழக்கில், நீதிபதி முன்னிலையில் நடிகை சுருதி ஹரிகரன் வாக்குமூலம் அளித்தார்.
நடிகர் அர்ஜூன் மீதான பாலியல் புகார் வழக்கு: நீதிபதி முன்னிலையில் நடிகை சுருதி ஹரிகரன் வாக்குமூலம்
Published on

பெங்களூரு,

நடிகர் அர்ஜூன் மீதான பாலியல் புகார் வழக்கில் நீதிபதி முன்னிலையில் நடிகை சுருதி ஹரிகரன் வாக்குமூலத்தை பதிவு செய்தார்.

நடிகர் அர்ஜூன் நடித்த விஸ்மய என்ற கன்னட படத்தில் (தமிழில் நிபுணன்), அவருக்கு ஜோடியாக நடிகை சுருதி ஹரிகரன் நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கு நடிகர் அர்ஜூன் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை சுருதி ஹரிகரன் கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், அர்ஜூன் மீது 4 சட்டப்பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கில் கடந்த 5-ந் தேதி கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் நடிகர் அர்ஜூன் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் நடிகை சுருதி ஹரிகரனிடம் ரூ.5 கோடி கேட்டு நடிகர் அர்ஜூன் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். அத்துடன் கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் தன் மீது பதிவாகியுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நடிகர் அர்ஜூனை வருகிற 14-ந் தேதி வரை கைது செய்ய இடைக் கால தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், நடிகர் அர்ஜூன் மீது கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் பதிவாகி உள்ள பாலியல் புகார் வழக்கில் பெங்களூரு 24-வது கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி கோபாலகிருஷ்ணா முன்னிலையில் நேற்று முன்தினம் நடிகை சுருதி ஹரிகரன் ஆஜரானார். அப்போது இந்த வழக்கு தொடர்பாகவும், நடிகர் அர்ஜூன் தனக்கு கொடுத்த பாலியல் தொல்லை குறித்தும் நீதிபதியிடம் நடிகை சுருதி ஹரிகரன் வாக்குமூலம் அளித்தார்.

பின்னர் இந்த வழக்கின் விசாரணையை 9-ந் தேதிக்கு (அதாவது இன்று) ஒத்திவைப்பதாக நீதிபதி கோபாலகிருஷ்ணா உத்தரவிட்டார். அதன்படி, இன்று (வெள்ளிக் கிழமை) விசாரணை நடைபெற உள்ளது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com