போதைப்பொருள் வழக்கு மருத்துவ பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சார்மி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

போதைப்பொருள் வழக்கில் விசாரணையின் போது மருத்துவ பரிசோதனைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சார்மி வழக்கு தொடுத்து உள்ளார்.
போதைப்பொருள் வழக்கு மருத்துவ பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சார்மி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
Published on

புதுடெல்லி,

தெலுங்கு பட உலகைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோருக்கு போதை பொருட்கள் சப்ளை செய்ததாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கெல்வின், ஐதராபாத்தை சேர்ந்த பியூஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் போதைப்பொருள் கும்பலுடன் தெலுங்கு நடிகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. விசாரணையில் நடிகர்கள் நவ்தீப், தருண், தனிஷ், நந்து, நடிகைகள் சார்மி, முமைத்கான், இயக்குனர் பூரி ஜெகன்னாத், ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே.நாயுடு உள்ளிட்ட 12 பேருக்கு முகாந்திரம் இருப்பதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியது. வழக்குகுறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணை குழுவின் முன்பாக இயக்குனர் பூரி ஜெகன்னாத், நடிகர்கள் தருண், பி.சுப்புராஜூ, நவ்தீப் உள்ளிட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்து உள்ளனர். இந்நிலையில் இவ்வழக்கில் சிக்கிஉள்ள நடிகை சார்மி விசாரணையின் போது மருத்துவ பரிசோதனைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்து உள்ளார். இவ்வழக்கில் விசாரணை தொடர்பாக நடிகை சார்மி புதன் அன்று சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை குழு முன்னதாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும். இந்நிலையில் அவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்து உள்ளார்.

போதைப்பொருள் வழக்கு குறித்து விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக்குழு முறையாக விசாரணை நடத்துவது இல்லை என சார்மி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

மேலும் விசாரணைக்கு ஆஜராகுபவர்களிடம் இருந்து பலவந்தமாக ரத்தம், தலைமுடி, நகங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் சேகரிக்கின்றனர். இது சட்டத்திற்கு புறம்பானது ஆகும். இந்த விவாகரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ரத்தம், தலைமுடி, நகங்கள் உள்ளிட்டவற்றை பெறுவது உள்பட மருத்துவ பரிசோதனைக்கு விலக்கு கோரி உள்ளார் சார்மி. விசாரணைக்கு நான் ஆஜராகும் போது என்னுடன் எனது வக்கீல் இருப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ள சார்மி, விசாரணையின் போது பெண் அதிகாரிகளும் உடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com