நடிகை பாலியல் வன்முறை வழக்கு கேரள ஐகோர்ட்டில் நடிகர் திலீப் மனு

நடிகை பாலியல் வன்முறை வழக்கில், சம்பவம் தொடர்பான காட்சி தொகுப்பை தன்னிடம் ஒப்படைக்க கோரி நடிகர் திலீப், கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.
நடிகை பாலியல் வன்முறை வழக்கு கேரள ஐகோர்ட்டில் நடிகர் திலீப் மனு
Published on

கொச்சி,

கேரளாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17ந் தேதி பிரபல நடிகை காரில் கடத்தி, பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்ட வழக்கு, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப் உள்ளிட்டவர்கள் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர். திலீப் கைது செய்யப்பட்டு 84 நாள் சிறைவாசத்துக்கு பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார்.

இந்த சம்பவத்தின்போது, குற்றவாளிகள் நடிகையை ஆபாசமாக படம் பிடித்த செல்போன் சிக்கவில்லை. முக்கிய காட்சிகளை குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களில் ஒருவரான பல்சர் சுனில் மெமரி கார்டுகளில் பதிவு செய்து வைத்து இருந்ததாகவும், அவற்றை போலீசார் கைப்பற்றியதாகவும் தகவல்கள் வந்தன. அந்த மெமரி கார்டுகளில் இருந்து சம்பவம் தொடர்பான காட்சி தொகுப்பினை எடுத்து, வழக்கை விசாரித்து வருகிற அங்கமாலி கோர்ட்டில் போலீசார் ஒப்படைத்தனர்.

இந்த காட்சி தொகுப்பை தன்னிடம் தர வேண்டும் என்று திலீப், அந்த கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அப்போது அவர் தரப்பில், நடிகை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு உள்ள வீடியோ காட்சி தொகுப்பு, போலியானது. சித்தரிக்கப்பட்டது. எனக்கு எதிரான எல்லா ஆதாரங்களையும் பெறுகிற உரிமை எனக்கு உண்டு. எனவே சம்பவம் பற்றிய வீடியோ காட்சி தொகுப்பைத் தர வேண்டும் என வாதிடப்பட்டது.

காட்சி தொகுப்பை குற்றம் சாட்டப்பட்டு உள்ள நடிகர் திலீப்புக்கு வழங்கினால், அது பாதிக்கப்பட்டு உள்ள நடிகையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்ற அரசு தரப்பு வாதத்தை அந்தக் கோர்ட்டு ஏற்று, நடிகர் திலீப்பின் மனுவை நிராகரித்து விட்டது.

அதை எதிர்த்து நடிகர் திலீப், கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

அந்த மனுவில் அவர், இந்த வழக்கை விசாரித்த அங்கமாலி கோர்ட்டு, குற்றம் சாட்டப்பட்டு உள்ள எனது தரப்பு உரிமையை மறுத்து விட்டது. எனவே சம்மந்தப்பட்ட குற்றச்சம்பவத்துடன் தொடர்புடைய வீடியோ காட்சி தொகுப்பினை என்னிடம் ஒப்படைக்க இந்தக் கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கூறி உள்ளார்.

இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com