

கோரக்பூர்,
காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும், பிரபல இந்தி நடிகருமான கோவிந்தா நேற்று காலை உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோரக்நாத் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்த அவர் அங்கு மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது. அப்போது உத்தரபிரதேச மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, சினிமா படப்பிடிப்புகளை உத்தரபிரதேசத்தில் நடத்துமாறு கோவிந்தாவை கேட்டுக்கொண்ட யோகி ஆதித்யநாத், சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக கடந்த 2 ஆண்டுகளாக தனது அரசு மேற்கொண்ட பணிகளையும் அவரிடம் எடுத்துக்கூறினார்.
மேலும், கும்பமேளா விழா குறித்த தகவல்கள் அடங்கிய புத்தகம் ஒன்றையும் அவருக்கு பரிசு அளித்தார். அதன்பின்பு கோவிந்தா, கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றார்.
முன்னதாக நடிகர் கோவிந்தாவை பார்ப்பதற்காக கோவிலில் ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.