இன்ஸ்டாகிராமில் மனைவிக்கு ஆபாச படம் அனுப்பியவரை எச்சரித்து அனுப்பிய நடிகர் சஞ்சு பசய்யா

இன்ஸ்டாகிராம் கணக்கை வைத்து வாலிபர் மனோஜை போலீசார் கைது செய்தனர்.
இன்ஸ்டாகிராமில் மனைவிக்கு ஆபாச படம் அனுப்பியவரை எச்சரித்து அனுப்பிய நடிகர் சஞ்சு பசய்யா
Published on

பெங்களூரு,

கன்னட தொலைக்காட்சிகளில் வெளியான காமெடி கலாட்டா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் சஞ்சு பசய்யா. இவரது மனைவி பல்லவி. இவரும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்கள் பெலகாவி மாவட்டம் பைலஒங்கலாவில் வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக விஜயநகரை சேர்ந்த மனோஜ் என்ற வாலிபர் நடிகை பல்லவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச குறுந்தகவல் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வைத்து வந்தார். இதுகுறித்து பல்லவி, தனது கணவர் சஞ்சு பசய்யாவிடம் கூறினார். அதை கேட்ட அவர் உடனே பைலஒங்கலா போலீசில் வாலிபர் மனோஜ் மீது புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார், இன்ஸ்டாகிராம் கணக்கை வைத்து மனோஜை கைது செய்தனர். இதற்கிடையில் மனோஜ் கைது செய்யப்பட்டதை அறிந்ததும் நடிகர் சஞ்சு பசய்யா பைலஒங்கலா போலீஸ் நிலையத்துக்கு சென்றார். மேலும் போலீசாரிடம் வழக்கை திரும்ப பெறுவதாகவும், வாலிபரை விடுவிக்கும்படியும் கூறினார்.

இதையடுத்து போலீசார் அவரை விடுவித்தனர். பின்னர் வாலிபரிடம் பேசிய, சஞ்சு பசய்யா இதேபோன்ற ஆபாச குறுந்தகவல், புகைப்படத்தை யாருக்கும் அனுப்பக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தார். மேலும் இந்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களிலும் வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் சஞ்சு பசய்யாவுக்கு சமூக வலைதளம் வாயிலாக பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com