நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா, காங்கிரசில் இணைந்தார்

முன்னாள் முதல்-மந்திரி பங்காரப்பாவின் மகளும், நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியுமான கீதா, டி.கே.சிவக்குமார் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார்.
நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா, காங்கிரசில் இணைந்தார்
Published on

பெங்களூரு:

காங்கிரசில் சேர்ந்தார்

கன்னட திரைஉலகில் தனக்கென தனி ரசிகர்களை கொண்ட குடும்பம் மறைந்த நடிகர் ராஜ்குமார் குடும்பம் தான். ராஜ்குமாரின் மூத்த மகன் பிரபல நடிகர் சிவராஜ்குமார். இவரது மனைவி கீதா சிவராஜ்குமார். முன்னாள் முதல்-மந்திரி பங்காரப்பாவின் மகளான இவர், ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருந்தார். அவர், சிவமொக்கா தொகுதியில் எடியூரப்பாவுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகிய கீதா சிவராஜ்குமார், நேற்று காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார். அப்போது டி.கே.சிவக்குமார், அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.

சிவராஜ்குமார் 3 நாள் பிரசாரம்

பின்னர் கீதா சிவராஜ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கட்சி. இந்த கட்சியில் சேருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எனது தந்தை பங்காரப்பாவுடன் இணைந்து பணியாற்றியவர். அவருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்கிறேன். எனது சகோதரர் மது பங்காரப்பா காங்கிரசில் சேர்ந்தார். அப்போது இருந்தே நான் காங்கிரசுடன் தான் இருந்தேன்.

எனது கணவர் சிவராஜ்குமாரும் காங்கிரசுக்கு ஆதரவாக 3 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார். அவர் தற்போது சினிமா படப்பிடிப்பில் இருக்கிறார். அதனால் ஓய்வு எடுத்து கொண்டு இந்த பிரசாரத்தை மேற்கொள்கிறார். கட்சி என்ன சொல்கிறதோ அதன்படி நடந்து செயல்படுகிறேன். கட்சி தலைவர்கள் கூறும் இடங்களில் நான் பிரசாரம் செய்வேன்.

இவ்வாறு கீதா சிவராஜ்குமார் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com