நடிகர் சுஷாந்த் சிங் மரண விசாரணையை சி.பி.ஐ. பகிரங்கப்படுத்த வேண்டும்: காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்

பிணமாக மீட்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் உள்ள மர்மத்தை சி.பி.ஐ. பகிரங்கப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
நடிகர் சுஷாந்த் சிங் மரண விசாரணையை சி.பி.ஐ. பகிரங்கப்படுத்த வேண்டும்: காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்
Published on

சுஷாந்த் சிங் மரணம்

இந்திப்பட உலகில் வளர்ந்து வந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்(வயது34) கடந்த ஆண்டு ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை

போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரேத பரிசோதனையிலும் அவர் கொலை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. ஆனாலும் சுஷாந்த் சிங் மரணத்தில் சர்ச்சை எழுந்தது.இதற்கிடையே மும்பை போலீசார் சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணையை நடத்தி வந்தனர். இது குறித்து போலீசார் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்கரவர்த்தி மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் இந்தி திரையுலகில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கத்தால் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் விசாரித்தனர்.குறிப்பாக அவர் வாரிசு நடிகர்கள், பெரிய நடிகர்களின் தலையீட்டால் படவாய்ப்புகளை இழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக மும்பை போலீசார் பிரபல இயக்குனர்கள், தயாரிப்பு நிறுவனங்களிடம் கூட விசாரணை நடத்தினர்.

மர்மம் உடையவில்லை

இந்தநிலையில் சுஷாந்த் சிங் வழக்கை மத்திய அரசு அதிரடியாக சி.பி.ஐ.க்கு மாறியது. அவர்கள் சுஷாந்த் சிங் வழக்கை மர்ம மரண வழக்காக விசாரித்தனர். அவர்கள் முழுக்க, முழுக்க சுஷாந்த் சிங் காதலி ரியா சக்கரவர்த்தி, வீட்டில்

தங்கியிருந்த நண்பர் சித்தார்த் பிதானி, வீட்டு வேலைக்காரர்கள் ஆகியோரிடம் மட்டுமே விசாரணை நடத்தினர். ஆனால் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.இந்தநிலையில் ரியா சக்கரவர்த்தி, சித்தார்த் பிதானி மற்றும் வீட்டு வேலைக்காரர்கள் சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வாங்கி கொடுத்ததாகவும், பயன்படுத்தியதாகவும் கூறி போதை பொருள் தடுப்பு பிரிவினர் அவர்களை கைது செய்தது. அந்த வழக்கின் விசாரணையும் தற்போது நடந்து வருகிறது.இந்தநிலையில் சுஷாந்த் சிங் மரணம் அடைந்து நேற்று ஓராண்டு நிறைவடைந்தது. ஆனால் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற மர்மம் இன்னும் உடையவில்லை. சி.பி.ஐ.யும் சுஷாந்தின் மரணம் குறித்து இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

வலைத்தளத்தில் அஞ்சலி

இந்தநிலையில் நடிகர் சுஷாந்த்சிங்கிற்கு நேற்று பல்வேறு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அஞ்சலி செலுத்தினர். இதில் சுஷாந்த் சிங் தற்கொலை செய்தாலும் சரி, கொலை செய்யப்பட்டு இருந்தாலும் சரி அவரது மரணத்தை வைத்து அரசியல் செய்யாமல், அரசு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.அப்போது தான் சுஷாந்தின் ஆன்மா சாந்தி அடையும் எனவும் அவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

காங்கிரஸ் கேள்வி

இந்தநிலையில் நடிகர் சுஷாந்த்சிங் வழக்கை மூடி வைத்து இருப்பது ஏன்? என காங்கிரஸ் கட்சி சி.பி.ஐ.க்கு கேள்வி எழுப்பி உள்ளது. இது குறித்து அந்த கட்சியின் மராட்டிய மாநில செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் டுவிட்டரில்

கூறியிருப்பதாவது:-

நடிகர் சுஷாந்த் சிங் துரதிருஷ்டவசமாக மரணமடைந்து இன்றுடன் ஓராண்டு முடிகிறது. அவரது வழக்கு விசாரணையை சி.பி.ஐ. தொடங்கி 310 நாட்கள் ஆகிவிட்டது. சுஷாந்த் சிங் கொலை செய்யப்படவில்லை என எய்ம்ஸ் மருத்துவமனை கூறி 250 நாட்கள் முடிந்துவிட்டது. சுஷாந்த் சிங் வழக்கில் சி.பி.ஐ. எப்போது இறுதி முடிவை அறிவிக்கும்?. அதை சி.பி.ஐ. மூடி வைத்திருப்பது ஏன்?.

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் மோடி அரசு என்.ஐ.ஏ., சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை மராட்டிய அரசை களங்கப்படுத்தும் மற்றும் தாக்கும் ஒரு ஆயுதமாக தான் பயன்படுத்தி வருகிறது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

தேசியவாத காங்கிரஸ்

இதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், மராட்டிய மந்திரியுமான நவாப் மாலிக் கூறுகையில், சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டு இருந்தால், கொலையாளி யார்? என்று தெரிவிக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக தான் இந்த மரண வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஓராண்டு முடிந்தும் சி.பி.ஐ. விசாரணையால் எந்த பலனும் இல்லை. பீகார் தேர்தலை சந்திக்கவும், மராட்டிய அரசை களங்கப்படுத்தவும் சுஷாந்த் சிங் மரணத்தை பா.ஜனதா ஆயுதமாக பயன்படுத்தியது என்று குற்றம்சாட்டி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com