நட்சத்திர ஓட்டலுக்கு வரவழைத்து பாலியல் தொல்லை: காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

பெண்களுக்காக நான் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளேன் என்று நடிகை ரினி ஆன் ஜார்ஜ் கூறினார்.
திருவனந்தபுரம்,
மலையாள பிரபல நடிகையும், சின்னத்திரை கலைஞருமான ரினி ஆன் ஜார்ஜ் கொச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒரு கட்சியின் இளம் தலைவர் சமூக வலைத்தளம் மூலம் என்னுடன் கடந்த 3½ ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தி கொண்டார். என்னை நட்சத்திர ஓட்டலுக்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் தொடர்ந்து ஆபாச படங்கள், ஆபாசமாக குறுஞ்செய்திகளை அனுப்பி வந்தார். இதை கண்டித்ததுடன், இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று வலியுறுத்தினேன். அதன் பின்னர் சில நாட்கள் தனது செயல்பாடுகளை நிறுத்தினார்.
இதையடுத்து அவர் மீண்டும் ஆபாச படங்கள், குறுஞ்செய்திகளை அனுப்பி வந்தார். அவரது மோசமான நடவடிக்கை குறித்து அந்த கட்சியின் தலைவரிடம் தெரிவித்தும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த போராட்டம் எனக்காக மட்டுமல்ல. பாதிக்கப்பட்ட பல பெண்களுக்காக நான் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளேன். அந்த கட்சியின் இளம் தலைவரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பல பெண்களை எனக்கு தெரியும்.
இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அவர் மீது கூறிய போது, அவரை நல்வழிப்படுத்த கட்சி தலைவர்கள் முன்வரவில்லை. அவரது தொல்லை தாங்க முடியாமல், உங்களது கட்சி தலைவருக்கு புகார் அனுப்புவேன் என்று தெரிவித்த போது, இதுபோன்ற புகார்களை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று கூறினார். இனி அடுத்த கட்டமாக அவரது பெயரை வெளியிடுவது குறித்து ஆலோசிப்பேன்.
அவரால் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள், எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல் நடந்தது குறித்து வெளியே சொல்ல முன்வர வேண்டும். அவரது பெயரை வெளியிடாததற்கு காரணம், அந்த கட்சியில் உள்ள பல தலைவர்களுடன் எனக்கு நல்ல உறவு உள்ளதால், அதை சீர்குலைக்க நான் விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் மற்றொரு மலையாள நடிகையும் புகார் கூறி இருந்தார். ஆனால் அந்த நடிகை, பெயரை குறிப்பிட்டு பாலக்காடு எம்.எல்.ஏ. ராகுல் மங்கூட்டத்தில் மீது பாலியல் புகார் கூறியதாக தெரிகிறது. மேலும் இளம்பெண்ணிடம் எம்.எல்.ஏ. தவறாக நடந்து கொண்டதாக சமூக ஆர்வலர் ஒருவர் எர்ணாகுளம் மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
இந்தநிலையில் கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த பாலக்காடு எம்.எல்.ஏ. ராகுல் மங்கூட்டத்தில் ராஜினாமா செய்யக்கோரி பா.ஜனதா மகளிர் அணி சார்பில், பாலக்காடு எம்.எல்.ஏ. அலுவலகம் நோக்கி பேரணி நடந்தது. அப்போது மகளிர் அணியினர் தங்களது கையில் கோழிகளை கொண்டு சென்றனர். எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் எம்.எல்.ஏ.வின் செயலால் பெண்களுக்கு அச்சம் ஏற்பட்டு வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. அவரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பி வலியுறுத்தப்பட்டது.






