

புதுடெல்லி,
சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் அசம்கான். இதே கட்சியின் சார்பில் உத்தரபிரதேசத்தில் 2 முறை ராம்பூர் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகை ஜெயப்பிரதா. இவர் தமிழில் நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ராஷ்டிரிய லோக் தளம் என்ற கட்சியில் இருக்கிறார்.
சமாஜ்வாடியில் இருந்தபோது ஜெயப்பிரதாவுக்கும், அசம்கானுக்கும் அவ்வளவாக ஆகாது. இத்தனைக்கும் 2004ம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த ஜெயப்பிரதாவை தனது கட்சிக்கு இழுத்து அவரை அந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிட வைத்தார். இந்த தேர்தலில் ஜெயப்பிரதா வெற்றியும் பெற்றார்.
அதன்பிறகு சமாஜ்வாடியின் இன்னொரு பிரபல தலைவரான அமர்சிங் ஆதரவாளராக ஜெயப்பிரதா மாறினார். ஒரே கட்சியில் எதிரெதிர் முகாமில் இருந்ததால் இருவரும் அடிக்கடி வார்த்தை போரில் மோதிக் கொள்வது உண்டு.
இந்தநிலையில் அசம்கானை, ஜெயப்பிரதா நேற்று கடுமையாக தாக்கினார். அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய பத்மாவத் திரைப்படத்தில் கொடுங்கோலனாக சித்தரிக்கப்பட்டிருந்த அலாவுதீன் கில்ஜியுடன் (14ம் நூற்றாண்டில் டெல்லியை ஆட்சி செய்த மன்னன்) அசம்கானை அவர் ஒப்பிட்டார்.
இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறுகையில், அண்மையில் பத்மாவத் திரைப்படத்தை பார்த்தேன். அதில் வரும் அலாவுதீன் கில்ஜி பாத்திரம் எனக்கு அசம்கானைத்தான் நினைவு படுத்தியது. 2வது முறையாக(2009) சமாஜ்வாடி சார்பில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிட்டபோது என்னை அந்த அளவிற்கு கொடுமை படுத்தினார் என்றார்.
அப்போது எனக்கு எதிராக ஆபாச புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளையும் வெளியிட்டு என்னை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு பொதுமக்களிடம் அசம்கான் ஆதரவாளர்கள் பிரசாரம் செய்தனர். வாய்மொழியாகவும் என்னன வசைபாடி தீர்த்தனர். அவர்கள் பேசிய வார்த்தைகள் ஒரு பெண் வெளியில் கூற முடியாதவை என்றும் அவர் கூறினார்.
எனினும் 2009 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஜெயப்பிரதா ராம்பூர் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றார்.
நீண்டகாலத்துக்கு பிறகு, ஜெயப்பிரதா பழைய நினைவுகளை கூறி அசம்கானை தாக்கி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.