மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியதாக புகார்: நடிகை குஷ்பு மன்னிப்பு கோரினார்

மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியதாக புகார் எழுந்ததைதொடர்ந்து நடிகை குஷ்பு மன்னிப்பு கோரினார்.
மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியதாக புகார்: நடிகை குஷ்பு மன்னிப்பு கோரினார்
Published on

புதுடெல்லி,

நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்தார். இதுகுறித்து அவர் பேசும்போது, மனநலம் குன்றிய ஒரு கட்சியில் இருந்து விலகி விட்டேன் என குறிப்பிட்டதாக தெரிகிறது. இதன்மூலம் மாற்றுத்திறனாளிகளை குஷ்பு இழிவுபடுத்தியதாக, மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான தேசிய தளம் என்ற தொண்டு நிறுவனம் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பாக குஷ்பு மீது தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சுமார் 30 போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் குஷ்புவுக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து தனது கருத்துக்காக குஷ்பு மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், அவசரம், ஆழ்ந்த வருத்தம் மற்றும் வேதனையான ஒரு தருணத்தில் நான் சில வார்த்தைகளை தவறாக பயன்படுத்தியதற்காக மிகவும் வருந்துகிறேன். எனது சொந்த குடும்பத்திலேயே மனநல பிரச்சினையால் போராடினேன். மனச்சோர்வு, இருமுனை கோளாறு போன்றவற்றுடன் வாழும் நண்பர்களைக் கொண்டுள்ளேன். மக்களின் பன்முகத்தன்மையை உணர்ந்தவள் மட்டுமின்றி அதில் இருந்து பெருமளவில் பெற்றும் உள்ளேன் என தெரிவித்தார்.

எனினும் குஷ்பு சட்டத்தை மீறியிருப்பதாகவும், இந்த விவகாரத்தில் சாக்குப்போக்கு எதுவும் கூற வேண்டாம் எனவும் தொண்டு நிறுவனத்தின் பொதுச்செயலாளர் முரளிதரன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com